அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவரின் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

 ஜனாப் ஏ.எஸ்.இஸ்மாயீல்
ரமழான் பயிற்சி வாழ்நாள் முயற்சியாக தொடரவேண்டும்!

மேன்மைமிகு ரமழானை சிறந்த முறையில் வரவேற்று, பேணுதலாக நிறைவேற்றி பெருமகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பினை, பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

ரமழான் வணக்கம் மட்டுமல்ல, சீரிய வாழ்க்கைத் திட்டம். தனி மனிதனை தீய செயல்களைவிட்டும் தவிர்ந்திருக்க பணிப்பதோடு, பயிற்சியும் தருகிறது. அன்றாடம் பட்டினியால் வாடும் ஏழை, வறியவர்களின் பக்கம் நம் பார்வை கருணையோடு திருப்பப்படுகிறது. ஜகாத் எனும் ஏழைவரியின் மூலம் ஏழைகளும் ஏற்றம் பெறும் எழில்மிகு பொருளாதாரத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

வழிகேட்டிலிருந்து நேர்வழி என்பது முற்றிலும் 
தெளிவாக பிரித்தறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 2:256)

என்ற குர்ஆன் வசனத்திற்கேற்ப நன்மை, தீமைகளை பிரித்தறிவிக்கக் கூடிய குர்ஆன், அறியாமை இருள் சூழ்ந்த அரபுலகத்தில் மிகப் பெரிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. ஆண்டான் அடிமை, நிறத்தால் வேற்றுமை, குலப் பெருமை, ஓயாத பூசல்கள் என அனைத்தையும் ஒழித்தது.

நாகரீக வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும் கண்ட இந்த நூற்றாண்டில் கூட ஊழலுக்கெதிராக, மதவாதத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்படுவதும், பின் சுருதி குறைவதும் அல்லது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மனித உணர்வுகளுக்கும், சுதந்திரத்திற்க்கும் கூட நீதி மறுக்கப்படுகிறது. ரமழான் நீதிக்கான போராட்டத்தை கற்றுத் தந்த சிறப்பான மாதம் என்பதை மறந்து விடக் கூடாது. ரமழானின் மூலமாக இறைவன் தனிமனித வாழ்வும், சமூக கூட்டு வாழ்வும் நேர்மையான முறையில் ஒழுங்குடன் இருக்கவேண்டும் என விரும்புகின்றான்.

நீங்கள் நீதியுடன் நடங்கள். (திருக் குர்ஆன் 4:135)

இறைவனுக்காக ரமழானில் நோன்பை எப்படி கடைபிடித்தோமோ, அதே போன்று அவன் விரும்பும் "சீரிய  வாழ்க்கைத் திட்டத்திற்காக" அவன் கட்டளைகளையும் ஏற்று செயல்பட நாம் இந்த பெருநாள் தினத்தில் உறுதி எடுக்க வேண்டும். ரமழானில் பயிற்சி வாழ்நாள் முயற்சியாக தொடர வேண்டும் என்பது நமது பேரவா.

உலக அமைதியையும், ஈருலக வாழ்வின் வெற்றியையும் இறைவனிடம் வேண்டியவர்களாக இத்திருநாளைக் கொண்டாடுவோம். ஈகைத் திருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!

ஏ.எஸ்.இஸ்மாயீல்,
தமிழ் மாநிலத் தலைவர்,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் பெருநாள் வாழ்த்துக்கள்

நாளை புதன்கிழமை தமிழகம் முழுவதும் பரவலாக ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் கோவை மாவட்டத் தலைவர் வி.எம்.அபுதாகிர் அவர்கள் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், "குல்லு ஆமின் அன்தும் பிகைர், அல்லாஹ் நாம் ரமழானில் செய்த எல்லா நல் அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நம்முடைய சமூகத்தை வலிமைப்படுத்த, அல்லாஹ்வின் கருணையும், காருண்யமும், மன்னிப்பும் இப்பொழுது மட்டுமின்றி, எல்லா காலங்களிலும் நம் மீது பொழியட்டுமாக! இந்த ஈகைத் திருநாள் இந்திய மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதாகவும், சந்தோசமானதாகவும், வளமானதாகவும் அமைய வாழ்த்துகிறேன். ஈதுல் பித்ர் முபாரக்" என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்திய மக்கள் அனைவருக்கும் பாப்புலர் பிரண்டின் ஈதுல் பித்ர் முபாரக்

ஈதுல் பித்ர் பெருநாள் உலகளாவிய சகோதரத்துவத்தையும், பிற மனிதர்களிடம் இரக்கம் காட்டுவதையுமே போதிக்கிறது.


ரமலான் மாதத்தில் நோன்பு, வணக்க வழிபாடுகள், ஜக்காத் மற்றும் பிற நல் அமல்களைச் செய்து ரமளானில் கிடைக்கும் மன நிறைவை முஸ்லிம்கள் உணர்கின்றனர். இந்த பயிற்சி ஆண்டு முழுவதற்கும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

ஒன்றிணைந்து அமைதியாக வாழ்தல், மத ஒற்றுமை, பிறரிடம் இரக்கம் காட்டுதல், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வலிமையான சமூகத்தை கட்டியெழுப்பவே ரமலானும், ஈதுல் பித்ரும் மக்களை ஆர்வமூட்டுகிறது.

இந்த பெருநாளோடு பின்னிப் பிணைந்துள்ள செய்திகளையும், மதிப்பீடுகளையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவும் வலியுறுத்தும் அதே வேளையில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
இல்யாஸ் முஹம்மது தும்பே 
மாநில தலைவர் 
பாப்புலர்  பிரண்ட்  ஆப்  இந்தியா
கர்நாடகா

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

ரமழான் - 29

ஸதகத்துல் ஃபித்ர்

1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

2)
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

3)
ரமழானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

4)
நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

விளக்கம்: ரமழான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தமை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!

சட்டங்கள்
கடமை: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பின் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.
 
அளவு
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
 

நாள்
இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராகமாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

ரமழான் - 28


ஸகாத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது    

இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து கடமைகளில் ஜகாத்தும் ஒன்று. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் 32 இடங்களில் இதனை வலியுறுத்துகிறான். மேலும்  ஸகாத்தினுடைய முக்கியத்துவத்தை பற்றி நபி(ஸல்) அவர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை பின் வருமாறு காண்போம்.  

காத் கொடுப்பது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதாகும்!

“இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:110)

 மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்! அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்! நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்! அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (அல்-குர்ஆன் 73:20)

காத் கொடுத்தால் இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது!

“யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:277)

மறுமையை நம்பாதவர்களே காத் கொடுக்க மாட்டார்கள்!

” இணை வைப்போருக்குக் கேடுதான்’ என்று (நபியே!) நீர் கூறும். அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்! மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!”(அல்-குர்ஆன் 41:7)

மறுமையை உறுதியாக நம்புபவர் தான் ஜக்காத் கொடுப்பார்கள்!

“(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்! இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்! அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்” (அல்-குர்ஆன் 27:3)
 மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

“அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்! ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்! இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்” (அல்-குர்ஆன் 31:4)

காத் கொடுப்பவர்கள் தான் மார்க்கத்தில் சகோதரர்கள் ஆவார்கள்!

“ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்” (அல்-குர்ஆன் 9:11)

தங்கம் வெள்ளிக்கு காத் கொடுக்காதவர்களுக்கான தண்டணைகள்!

” எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 9:35)

கழுத்தில் போடப்படும் அரிகண்டம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்” இதைக் கூறிவிட்டு,
‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
                                                    
                                                    அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

காத் கொடுப்பவர்கள் கல்வியில் உறுதியுடையோரும், இறை நம்பிக்கையுடையோரும் ஆவார்கள்!

“எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்! இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 4:162)


காத் கொடுப்பவர்களே மஸ்ஜிதுகளை நிர்வகிக்க தகுதியுடையோராவார்கள்!

“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 9:18)

காத் கொடுத்தால் கிருபை செய்யப்படுவீர்கள்!

“(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்! மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 24:56)

அல்லாஹ்விடத்தில் பெருகும் செல்வம்!

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)

காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

“(காத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்” (அல்-குர்ஆன் 9:60 )

சுவர்க்கம் செல்வதற்கான வழி :

அபூ ஹுரைரா(ரலி) அறிவிகின்றார்கள்:
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்" என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்"
என்றார்கள்.                                                                                       (புகாரி)
எனவே அல்லாஹ் கட்டளையிட்ட மற்றும் அல்லாஹ்வுடைய தூதர் காட்டி தந்த அடிப்படையில் இறைவனுக்கு அஞ்சி ஸகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம். இன்ஷா அல்லாஹ்.

தேடுதல்