மேன்மைமிகு ரமழானை சிறந்த முறையில் வரவேற்று, பேணுதலாக நிறைவேற்றி பெருமகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பினை, பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
ரமழான் வணக்கம் மட்டுமல்ல, சீரிய வாழ்க்கைத் திட்டம். தனி மனிதனை தீய செயல்களைவிட்டும் தவிர்ந்திருக்க பணிப்பதோடு, பயிற்சியும் தருகிறது. அன்றாடம் பட்டினியால் வாடும் ஏழை, வறியவர்களின் பக்கம் நம் பார்வை கருணையோடு திருப்பப்படுகிறது. ஜகாத் எனும் ஏழைவரியின் மூலம் ஏழைகளும் ஏற்றம் பெறும் எழில்மிகு பொருளாதாரத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
வழிகேட்டிலிருந்து நேர்வழி என்பது முற்றிலும்
தெளிவாக பிரித்தறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 2:256)
என்ற குர்ஆன் வசனத்திற்கேற்ப நன்மை, தீமைகளை பிரித்தறிவிக்கக் கூடிய குர்ஆன், அறியாமை இருள் சூழ்ந்த அரபுலகத்தில் மிகப் பெரிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. ஆண்டான் அடிமை, நிறத்தால் வேற்றுமை, குலப் பெருமை, ஓயாத பூசல்கள் என அனைத்தையும் ஒழித்தது.
நாகரீக வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும் கண்ட இந்த நூற்றாண்டில் கூட ஊழலுக்கெதிராக, மதவாதத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்படுவதும், பின் சுருதி குறைவதும் அல்லது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மனித உணர்வுகளுக்கும், சுதந்திரத்திற்க்கும் கூட நீதி மறுக்கப்படுகிறது. ரமழான் நீதிக்கான போராட்டத்தை கற்றுத் தந்த சிறப்பான மாதம் என்பதை மறந்து விடக் கூடாது. ரமழானின் மூலமாக இறைவன் தனிமனித வாழ்வும், சமூக கூட்டு வாழ்வும் நேர்மையான முறையில் ஒழுங்குடன் இருக்கவேண்டும் என விரும்புகின்றான்.
நீங்கள் நீதியுடன் நடங்கள். (திருக் குர்ஆன் 4:135)
இறைவனுக்காக ரமழானில் நோன்பை எப்படி கடைபிடித்தோமோ, அதே போன்று அவன் விரும்பும் "சீரிய வாழ்க்கைத் திட்டத்திற்காக" அவன் கட்டளைகளையும் ஏற்று செயல்பட நாம் இந்த பெருநாள் தினத்தில் உறுதி எடுக்க வேண்டும். ரமழானில் பயிற்சி வாழ்நாள் முயற்சியாக தொடர வேண்டும் என்பது நமது பேரவா.
உலக அமைதியையும், ஈருலக வாழ்வின் வெற்றியையும் இறைவனிடம் வேண்டியவர்களாக இத்திருநாளைக் கொண்டாடுவோம். ஈகைத் திருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!
ஏ.எஸ்.இஸ்மாயீல்,
தமிழ் மாநிலத் தலைவர்,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக