முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர்
"பகதூர்ஷா ஜாஃபர்"
பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.
இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.
1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டாம் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார்.
நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில்,
"என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.
அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம். என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது.
அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.
மாவீரரின் மதச்சார்பின்மை :
முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.
பாடபுத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம் செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்...
இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினார்.
ஒரு சமயத்தில் 200 க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன் கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்தபோது முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தார்.
ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிருஸ்துவ மதத்திற்கு மாறியபோது உலேமாக்கள் அவரை அரண்மைனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஜாபர் மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விசயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார்.
தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.
சிப்பாய் புரட்சியில் :
ஆனால் மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.
இத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது.)
டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
அந்நிய ஆட்சி வீழ்க!
பேரரசர் பகதுர்ஷா வாழ்க!
என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.
இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார். நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.
கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.
பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது.
அதில் கைதான - கொல்லப்பட்ட - தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.
1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.
1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர்.
1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.
மாமன்னரின் சிறை வாழ்க்கை :
மாமன்னரின் சிறை வாழ்க்கை :
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.
சிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.
சிப்பாய்களின் இந்தச் செய்கையால் ஜாபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார்.
"இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார்.
சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.
"எச்சரிக்கையாய் இருங்கள் இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று கெஞ்சினார்.
ஆனால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டது. காலித்தின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது.
சிறைச்சாலையில் ஒரு நாள்...
ஒரு நாள் காலை... காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.
ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.
ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.
அங்கே... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு...
இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து...)
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!
(கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு...
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா: ஹட்ஸன்... அரசர்கள் அழுவதில்லை! என்று பெருமிதத்துடன் கூற... (தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்)
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்... உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.
ஒரு பிடி மண் :
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது.
ஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லிமாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.
மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது.
"என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.
தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.
சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார்.
1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.
அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம்.
ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார்.
போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் அன்று முஸ்லீம்கள் தனித்து விளங்கினர்.
இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அன்னிய ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்து சுதந்திர இந்தியாவை உருவாக்க அதிக கவனம் செலுத்தினர்.
ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் உப்புசத்தியாக்கிரஹங்கள் என்று அஹிம்சா வழியியிலான அனைத்துப் போராட்டங்களை நடத்திப்பார்த்தும் அவைகளுக்கு மதிப்பளிக்காத வெள்ளையர்கள் மாமன்னர் பகதூர்ஷாவின் ராணுவப் புரட்சியில் நிலை குலைந்தனர்.
பகதூர்ஷாவின் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் :
மாமன்னர் பகதூர்ஷா அவர்கள் வெள்ளையர்களின் நயவஞ்சகத் தனத்தால் ஒடுக்கப்பட்டப்பின் அவருக்கடுத்து அதே வழியில் சுதந்திரப் போராட்டப் பயணத்தை;த் தொடங்கினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார்.
பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,
“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” - என்று சபதமேற்றார்.
இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே... ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
(அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
இந்த தியாக வீரரின் வரலாற்றை முற்றிலுமாக எந்த சக்தியாலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக