அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 5

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி


வீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ஏழை வர்க்கத்தில் தோன்றிய சாமான்யர்களால் வரலாறுகளையே திணறடிக்கவும் முடிந்திருக்கிறது.

அப்படியரு வரலாற்று பெருவீரன்தான் ஹைதர் அலி. ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் போருக்கு எதிராக கர்ஜித்த மைசூர் சிங்கம்தான் ஹைதர் அலி.

இவரது முன்னோர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில், ஒரு சூபி குடும்பம் குல்பர்காவை நோக்கி வந்தது. அப்பகுதியில் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஷியா சிந்தனைப் பிரிவின் தாக்கமும், பாரசீக மொழியின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், தர்ஹா பணியாளர்கள் என பலரும் இருந்தனர்.

இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1686ல் ஒளரங்கசீப், பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவர் தான் பத்தே முஹம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல ஊர்களில் குடியமர்ந்து இறுதியாக கோலார் (தங்கவயல்) பகுதியில் குடியேறினார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடைக்காலத்தில் கன்னடத்தின் வெவ்வேறு பகுதிகளில் தங்களின் வசதிக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

ஆனால், பத்தே முஹம்மது கோலாரில் தங்கினார். பின்னர் ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார்.

சிங்கம் பிறந்தது

அப்போது தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஹைதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு 1721ல் பிறந்தார் ஹைதர் அலி.

ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால் முகலாய சாம்ராஜ்யம் அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி பலவீனம் அடைந்தது. அவரது வாரிசுகளின் திறமையின்மையால் பாபரில் தொடங்கிய முகலாயர் வரலாறு, முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத் தில்தான் ஹைதர் அலி வளர்கிறார்.

அக்காலக் கட்டத்தில்தான் ஒளரங்கசீபால் நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நவாபுகளும், நிஜாம்களும் முகலாயப் பேரரசை உடைத்து தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொள்கின்றனர். அப்போதுதான் ஆங்கிலேயர்கள் வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்குப் போட்டியாக பிரெஞ்சுக்காரர்கள் வேறு.

மைசூர் அரசியல்

இத்தகைய அரசியல் தட்பவெப்பம் நிலவிக் கொண்டிருந்த போது, மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழும், பாமினி¢, சுல்தான்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது கிருஷ்ணராஜா என்ற 20 வயது இளைய மன்னனிடம் சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.

1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.

தொடர்ந்து முன்னேற்றம்

அதற்குப் பரிசாக குதிரைப் படைக்குத் தளபதியாக நியமிப்பார் ஹைதர் அலி. திறமைசாலியின் உழைப்பு வீண் போவதில்லைதானே…!

1750-ல் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் கர்நாடக யுத்தம் நடைபெற்றது. மைசூர் அரசு பிரஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போது நடைபெற்ற போரில் ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.

அந்தப் போர் அனுபவம்தான் ஹைதர் அலிக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது! ஐரோப்பியர்களின் ராணுவ நுட் பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.

இத்தருணத்தில் மைசூர் ஆட்சியில் நிலவிய உள் அரசியலை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். 1734ல் ஐந்து வயதில் குழந்தை மன்னராகப் பதவியேற்ற சிக்க கிருஷ்ணராஜாவை ஆட்டிப் படைக்கும் அமைச்சராக இருந்தவர் நஞ்சராஜர். இவரும் படைத்தளபதி தேவராஜும்தான், குழந்தை மன்னரின் தந்தையைக் கொன்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவலாகும்!

அத்தகைய திறமை(!) வாய்ந்த அமைச்சர் நஞ்ஞராஜர், ஹைதர் அலியின் திறமையை நம்பினார். மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார். தன் மீது வைத்த நம்பிக்கையை அவர் வீணாக்கவில்லை. ஐரோப்பிய ராணுவ நுட்பங்களைக் கண்டறியும் இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கினார். மேலும் ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அங்கு உருவாக்கினார்.

பட்டமும் பாராட்டுகளும்

இன்னொருபுறம் ஆட்சிக்கு எதிராக மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. சம்பள உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் 1758ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு ஹைதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த வருடம் மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. வலுவான மராட்டியப் படையை வேறு யாரால் எதிர்கொள்ள முடியும்? இப்போதும் ஹைதர் அலிதான் தலைமையேற்று களமாடினார்.

அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ‘‘தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்’’ என்ற பட்டத்தை மைசூர் அரசவை ஹைதருக்கு வழங்கி கௌரவித்தது.

எந்த ஒரு தலைவனும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் சிறந்த தலைவனாக உருவாக முடியும்.

மைசூர் படையில் சம்பள பாக்கியின் காரணமாகத்தான் முன்பு கலகம் ஏற்பட்டது. கலகம் அடக்கப்பட்டாலும், அதிருப்தி நீடித்தது.

இது நல்லதல்லவே… என தீவிரமாக யோசித்த ஹைதர் அலி, தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார்.

இதனால் மைசூர் படை வீரர்கள் ஹைதர் அலியைக் கொண்டாடினர். மன்னர் சிக்க கிருஷ்ணராஜரும் மகிழ்ச்சியடைந்தார்.

கூட்டணியும், சவால்களும்…

ஹைதர் அலியின் நிர்வாகத் திறனும், ஆளுமை பண்புகளும் அவரது புகழை உயர்த்தியது. இளம் வயது மன்னராக இருந்த கிருஷ்ணராஜா ‘பொம்மை’யாக இருக்க, அவரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராஜும், நஞ்சராஜும் சொகுசு வாழ்க்கையில் திளைக்க ஹைதர் அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “மஹாராஜா”வாக வளர்ந்துக் கொண்டிருந்தார்.

பகை எங்கிருந்தாலும் தேடி சென்று முறியடிக்கும் ஹைதர் அலி, அக்கம் பக்கத்து ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார். மராட்டியத்தை சேர்ந்த கோபால்ராவ் என்ற மன்னர் மைசூர் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்தார் குமுறி எழுந்த ஹைதர் அலி, மராட்டிய படையை துவம்சம் செய்து, துரத்தியடித்தார். இது நடந்தது 1758ம் வருடம் என்றும் 1759ம் வருடம் என்றும் வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

இவ்வெற்றியை போற்றும் வகையில் “பதே ஹைதர் பஹதூர்” (தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது. ஹைதர் அலியை அடக்குவதற்கு ஆங்கிலேய படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் மராத்தியர்களும், ஹைதராபாத் நிஜாமும் இணைந்தனர்.

அரசரானார் ஹைதர் அலி

இதையறிந்த ஹைதர் அலி புதுச்சேரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்க செய்தார். இதனிடையே ஹைதர் அலியை சுற்றிலும் பொறாமை தீ பற்றியது. அமைச்சர்கள் தேவராஜும், நஞ்சராஜுவும் ஹைதர் அலியை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பூனைகளால் சிங்கத்தை எப்படி அடக்க முடியும்?

ஹைதர் அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் கிருஷ்ணாராஜாவுடன் ஆலோசித்தனர்.

எதையும் குறிப்பால் உணர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் நடவடிக்கை எடுப்பவனே மிகச்சிறந்த வீரனாக இருக்க முடியும். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்துக் கொண்ட ஹைதர் அலி, விஷப்பூச்சிகளான அவ்விரு அமைச்சர்களையும் சிறைப்படுத்தி, பொம்மை மன்னராகவும் ஓரங்கட்டி 1762ல் மைசூர் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.

இதை மிகச்சரியான அரசியல் நடவடிக்கை என வரலாற்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆட்சியாளர்கள் பலவீனமானவர்களாக இருந்த நிலையில், நாட்டைக் காக்க, எல்லாத் தகுதிகளும் பொருந்திய, அதே ஆட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த ஒருவர் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவாக இது பாராட்டப்படுகிறது.

இனி.. சொல்லவா வேண்டும்..? ஆங்கிலேயர்கள் நிம்மதி குலைந்தனர். ராணுவ தளபதியாக இருக்கும்போதே நம்மை இன்னலுக்குள்ளாக்கியவர், ஆட்சியாளராக வந்துவிட்ட நிலையில் அவர்களால் எப்படி நிம்மதியாக இருந்திருக்க முடியும்.

தன் ராஜ தந்திரத்தால், ஆங்கிலேயர், ஹைதராபாத் நிஜாம், மராட்டியர் கூட்டணியை உடைத்து, மராட்டியரை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் ஹைதர்!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக

ஆட்சிக்கு வந்ததும் முதலில் ராணுவத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். ஐரோப்பிய ராணுவங்களை போன்று முறைப்படுத்தப்பட்ட, நவீன ராணுவத்தை இந்தியாவில் முதலில் உருவாக்கியவர் ஹைதர் அலிதான்! விவசாயிகளின் நண்பனாகவும் திகழ்ந்தார். ராணுவ வீரர்களுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை மாத சம்பளத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவருடைய படையில் 1,80,000 வீரர்கள் இடம்பெற் றிருந்தனர். நவீனரக ஆயுதங்கள் தயாரிக்கவும், பயிற்சியளிக்கவும் இருநூறுக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் பணியாற்றினர். அவரது ராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் நாடெங்கும் செய்தி பரவியது. இது எதிரிகளை குலை நடுக்கம் கொள்ளச் செய்தது.

முதல் மைசூர் போர்

ஜெனரல் ஜோசப் ஸ்மித் என்ற ஆங்கிலேயர் தளபதி தலைமையில் ஹைதர் அலிக்கு எதிராக 1767, ஏப்ரலில் யுத்தம் தொடங்கியது. போரை கண்டு அஞ்சிய மற்றொரு இந்திய மன்னரான ஹைதராபாத் நிஜாம், 23.2.1768ல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்துக் கொண்டார்.

ஆனால் ஹைதர் அலி அடங்க மறுத்து மோதினார். மேற்கே மராட்டியரை தோற்கடித்து மங்களூரை வென்றார். கிழக்கே ஆங்கிலேயர்களை தன்னந்தனியாக எதிர்த்தார்.

ஈரோட்டில் ஆங்கிலேயப் படைகளை தோற்கடித்தார். தளபதி நிக்ஸன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஈராண்டு காலம் நடைபெற்ற இப்போர் முதல் மைசூர் போர் என வரலாற்றில் போற்றப்படுகிறது. இதனை முதல் காலனியாதிக்க எதிர்ப்பு போர்” என இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் புகழ்கிறார்கள்.

இதனிடையே ஆங்கிலேயர்கள் ஹைதருடன் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டனர். அவரவர் ஆக்கிரமித்த நிலங்களை திருப்பியளிப்பது என்றும், மைசூர் ஆட்சிக்கு ஆபத்து எனில் ஆங்கிலேயப் படை உதவிக்கு வரும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டது.

இரண்டாம் மைசூர் போர்
 
முதுகில் குத்துவது ஆங்கிலேயர்களுக்கு ‘கை வந்த கலை’ ஆயிற்றே அந்த நேர ஆபத்திலிருந்து தப்பிக்க அவர்கள் போட்ட சதிதான் அந்த ஒப்பந்தம்!
மராட்டியர்கள், மைசூர் ஆட்சியின் மீது போர் தொடுத்தனர் ஒப்பந்தப்படி, ஆங்கிலேயப் படைகள் ஹைதருக்கு உதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை! இது ஹைதரை கோபப்படுத்தியது.

1780ல் இரண்டாம் கர்நாடகப் போர் தொடங்கியது. 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் புயல் வேகத் தாக்குதலை நடத்தினார் ஹைதர்! ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் யுத்தம் தீவிரமாக நடந்தது.
பேரம்பாக்கம் என்ற இடத்தில் ஆங்கிலேயப் படைகளை வழிமறித்து குதறியது ஹைதரின் படை. தலைதெறிக்க சிதறி ஓடினர் எதிரிகள். அப்போரில் 2000 ஆங்கிலேயர்கள் உட்பட ஏழாயிரம் எதிரிப்படைகள் கொல்லப்பட்டனர். 2000 வெள்ளைய வீரர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.

இரண்டாம் கர்நாடகப் போர் 1780ல் தொடங்கி 1784 வரை நான்காண்டுகள் நீடித்தது. ஹைதரை தொடர்ந்து, அவரது மகன் திப்புவும் இப்போரை வழி நடத்தினார்.

நீண்டப் போரில் ஹைதர் அலி சளைக்கவில்லை. தன் படையின் உற்சாகமும், குன்றாமல் பார்த்துக் கொண்டார். அதுதானே ஒரு மிகச்சிறந்த தலைவனின் தலைமைத்துவம்! அதை சரியாக செய்தார்!

தனது நீண்ட நெடிய போர் திட்டம் குறித்து தனது தளபதிகளுக்கு மத்தியில் அவர் ஆற்றிய உரை சரித்திரப் புகழ் பெற்றது.

“ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (இன்றைய ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.

- ஹைதர் தன் தளபதிகளிடம் ஆற்றிய வீர உரை (ஜனவரி 1782)
அவரது உரையில் உள்ள கருத்துகளை ஆராயும்போது அவரது போர் தந்திரங்களையும் அரசியல் அறிவையும், உலக நாடுகளின் மீதான புரிதல்களையும் நம்மால் உணர முடிகிறது.

தேசப்பற்று

இஸ்லாமிய சிந்தனையும், அனைத்து மத குடிமக்களையும் சமமாக மதிக்கும் மாண்புகளும் ஹைதரின் மக்கள் செல்வாக்கும் கூடுதல் பலம் சேர்த்தன. அவர் ஹைதராபாத் நிஜாமை முஸ்லிம் என்பதற்காக அரவணைக்கவில்லை. மராட்டியர்களை இந்துக்கள் என்பதற்காக எதிர்க்கவில்லை. அன்னியர்களுடன் அவர்களை இணைந்திருந்த காலகட்டங்களில், தேச நலனுக்காக அவர்களை எதிர்த்தார்.

அதே சமயம் இரண்டாம் கர்நாடக யுத்தம் நடந்தபோது மராட்டியர்களையும், ஹைதராபாத் நிஜாமையும் இணைத்து “ஐக்கிய கூட்டணி”யை அமைக்கவும் அவர் தவறவில்லை.

தென்னிந்தியாவில் ஹைதரைப் போல், கிழக்கிந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் சிராஜ்.உத்-தௌலா என்ற மாவீரர்! அவர் 1779ல் பிளாசி என்ற இடத்தில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு, கல்கத்தா துறைமுகத்தில் தூக்கிலிடப்பட்டார். இச்செய்தி ஹைதரை துன்பத்தில் ஆழ்த்தியது, தனது தேசத்தின் சக போராளி வீழ்ந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆங்கிலேயர்களிடம் இந்திய மன்னர்கள் தோற்கக்கூடாது என சிந்தித்தவர். மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் மீதான எதிர்ப்புகளை கைகழுவினார் என்பது அவரது தேசப்பற்றிற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.

மகனுக்கு கடிதம்.

இரண்டாம் மைசூர் யுத்தம் ஹைதரின் கனவுப்போர் ஆகும். எப்படியும் ஆங்கிலேயர்களை வீழ்த்தி விடலாம் என உறுதிபூண்டு சீறிக்கொண்டிருந்தார்.
1782 டிசம்பர் மாதம் இன்றைய ஆந்திர மாநிலம் சித்தூரில் போர் செய்துக் கொண்டிருந்தார் அப்போது, கேரளாவின் மலபார் பகுதியில் அவரது மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது போர் குறித்தும், இந்திய தேசத்தின் விடுதலை குறித்தும் இந்தியாவின் பெருமை குறித்தும் அவர் எழுதிய கடிதம், தேசப்பற்றாளர்களை கண்ணீரில் ஆழ்த்தும் உருக்கமான ஆவணமாகும்.
அதில் கூறுகிறார்….

அன்பு மகனே… அதிகாரம் மற்றும் நமது மைசூர் ஆட்சியின் பாதுகாப்பு குறித்தும் நான் கவலைப்படவில்லை. நமது முன்னோர் முகலாயர் ஆட்சியில், ஆசியா கண்டத்தில் நமது இந்திய தேசம் கௌரவமான இடத்தை வகித்தது. ஆனால் இன்று நமது தாய்நாடு சிதறிப்போய் கிடக்கிறதே… நமது இந்திய மக்களுக்கு தேசத்தின் மீதான நேசம் குறைந்துப் போய்விட்டதே.. என அக்கடிதத்தில் அங்கலாய்க்கிறார்.

டிசம்பர் 6 கறுப்பு நாள்

இன்றைய தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அவர் மகன் திப்பு வெற்றி கொள்கிறார். கடலூரும் கைப்பற்றப்படுகிறது. இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, ஹைதர் எதிர் பாராத வகையில் நோயுற்றார். அப்போது அவருக்கு வயது 60. தேசத்தின் மீது பற்று வைத்த ஹைதரின் முதுகு தண்டுவடத்தில் புற்று நோய் தாக்கியது.

கண்களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் இயங்க முடியாமல் முடங்கியது. 1782 டிசம்பர் 6 இந்தியாவின் மற்றொரு கறுப்பு தினம். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது. உயிரோடிருந்த இந்தியர்களை உயிரோடு வதைத்தது இத்துக்கச் செய்தி!

மகன் திப்புவின் வேண்டுகோளை ஏற்று அவரது உடல் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அங்கே விடுதலையின் விதைகள் வீரியத்துடன் எழுந்தது. ஹைதரின் மகன் திப்பு சுல்தான் தலைமையில் எரிமலையாய் வெடித்தது என்பது அடுத்தக்கட்ட வரலாறாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்