சுவனப் பயணத்துக்காய்
கட்டுச்சாதம் தயார் செய்வோம் !
கட்டுச்சாதம் தயார் செய்வோம் !
"உங்ககுக்கு முன் சென்றோர்மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது, நீங்கள் தக்வாவை பெற்றுக் கொள்வதற்காக"
அல் குர்ஆன் (2:183)
தூதரின் வழியைப் பின்பற்றி சுவனப் பாதையில் பயணிக்க அடிப்படையான ஒரு தகுதியை மனிதன் பெற வேண்டியுள்ளான். அதுதான் தக்வா. குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகின்றது.
"இது வேத நூல். இதில் சந்தேகமில்லை; இது முத்தக்கீன்களுக்கு நேர்வழி காட்டும். முத்தக்கீன்கள் (யாரெனில் ) மறைவானவற்றை நம்பி, தொழுகையை நிலைநாட்டி அல்லாஹ் அருளியவற்றிலிருந்து (அல்லாஹ்வின் திருப்தியை நாடிக்) கொடுத்து இறுதித் தூதருக்கும் அதற்கு முந்திய தூதர்களுக்கும் அருளப்பட்டவற்றையும் நம்பி, நியாயத் தீர்ப்பு நாளையும் உண்டென்று நம்புவார்கள்.
முத்தக்கீன்களின் பண்புகளாக அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறியுள்ள பண்புகளைப் பார்க்கும்போது ஓர் உண்மை புலப்படுகிறதல்லவா? அதாவது குர்ஆனிலிருந்து நாம் நேர்வழியை அடைய வேண்டுமானால் நாம் "முத்தக்கீ" என்ற அந்தஸ்த்தை அடைந்தாக வேண்டும். முத்த்க்கீயின் பண்புகளை குர்ஆனின் வெளிச்சத்தில் வரிசைப்படுத்தினால்...
1. மறைவானவற்றை (அல்லாஹ், மலக்குகள், சுவனம், நரகம், மீஸான்... ) உண்டென்று நம்புவான்.
2. அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருள்கள் (பொருள், செல்வம், அறிவு, ஆற்றல், அந்தஸ்து, நேசம்...) அனைத்தும் சுவனத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் செலவழிப்பான்.
3. இறுதி நபியையும் அவருக்கு முன்வந்த நபிமார்கள், வேதங்கள் என்பவற்றையும் நம்புவான்.
4. நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை உறுதியாக நம்புவான்.
குர்ஆனின் கண்ணோட்டத்தில் மனிதன் பெறக கூடிய அந்தஸ்து பின்வருமாறு தரப்படுகின்றது.
இஸ்லாம் =>ஈமான் =>தக்வா => முத்மஇன்னா
"முத்மஇன்ன" என்ற படித்தரத்தை அடைந்தவர்கள்தான் சுவனத்து சுகந்தத்தை அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்றவராவர். சுவனவாதிகளை நோக்கி, "யா அய்யது ஹன் நப்ஸுல் முத்மஇன்ன! (திருப்தியடைந்த ஆத்மாவே!) நீ உன் இறைவன் பக்கம் செல்! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கிறான். நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து என்னுடைய சுவனபதியிலும் நுழைந்து விடு" என்றும் கூறுவான்.
இந்த குர்ஆன் வசனத்திநூடாக "முத்மஇன்னா" என்ற உயர் அந்தஸ்தை, படித்தரத்தை அடைந்தவன் மட்டும்தான் சுவனவாதியாக சுவனச்சொளைகளில் சுற்றித் திரிய முடியும் என்பது புலனாகின்றது.
முத்தக்கீயாகி நேர்வழியில் நடந்தால்தான் முத்மஇன்னா என்ற நிலையை அடைந்து சுவனம் சென்றடையலாம் அல்லவா? அப்படியென்றால் சுவனப்பாட்டையில் பிரவேசிப்பதற்கான கட்டுச்சாதம் தக்வாதான் என்பது புரிகிறதல்லவா? இந்தக் கட்டுச்சாதத்தைத் தயார் செய்வதற்காக அல்லாஹ்வால் உவந்தளிக்கப்பட்ட சந்தர்ப்பம் தான் ரமழான் மாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக