ஒரு சிலருக்கு எதிராக சாட்சி சொல்ல மும்பை காவலர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபர்களைப் பற்றி எதுவும் தெரியாததால் அவர் சாட்சி சொல்ல மறுத்தார். இதற்காக காவலர்கள் அவரை சித்திரவதை செய்தனர். கொன்றுவிடுவோம் என்று மிரட்டியும் பார்த்தனர். குண்டுவெடிப்பு வழக்கில் அவருடைய சகோதரர்கள் மீது குற்றம் சுமத்துவோம் என்றும் கூறினர். அவர் எதற்கும் பணியாததால் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக அழைத்துச் செல்லப்பட்டார். சித்திரவதை செய்து ஒரு மாதத்திற்கும் மேலாக மிரட்டியும் பார்த்தனர். அதற்கும் மசியாமல் அறிமுகமற்ற நபர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால் 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டார். அவர் தான் அப்சல் உஸ்மானி.
உஸ்மானி தான் கடந்து வந்த கர்ண கொடூரமான பயணத்தைப் பற்றிய விவரங்களை 2009 பிப்ரவரி 11-இல் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மும்பை MCOCA நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதம் இப்போது வெளியாகியுள்ளது.
குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்பு உஸ்மானி ஒரு சிறிய தொழிலை செய்து வந்தார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு மும்பையில் அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தார். இளமைப் பருவத்திலிருந்தே அவர் அங்கு வசித்து வருகிறார். சொந்தமாக ஒரு அடுமனையை (பேக்கரி) நடத்தி வந்தார். ஒரு சில சின்னஞ்சிறு வழக்குகள் அவரின் மீது இருந்தது காவலர்களுக்கு அவரை இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ள தூண்டுகோலாக அமைந்தது. பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்ட பல முஸ்லிம்களின் உண்மை நிலை இது தான். அதில் ஒரு சிலரை போலி மோதலில் (என்கவ்ண்டரில்) தீவிரவாதி என்று சொல்லி சுட்டுக் கொலை செய்கின்றனர்- குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் சேக்கை சுட்டு கொலை செய்தது போல.
அப்சல் உஸ்மானி 2008 ஆகஸ்ட் 27 அன்று சியூரி அமர்வு நீதிமன்றத்தில் நடக்கவிருந்த முந்தைய வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக 2008 ஆகஸ்ட் 26 அன்று கோடான் விரைவு தொடர் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். மும்பை DCB CID காவலர்கள் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். சில வழக்குகளில் சாட்சி சொல்லவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அடுத்த நாள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தினார்கள். ஒரு மாத காவல் துறை விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். மீண்டும், மீண்டும் விசாரணைக்கு எடுத்து சித்திரவதை செய்தனர். மிரட்டிக்கொண்டே இருந்தனர். 2008 ஜூலை 26-இல் நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்பில் பொய் சாட்சி கூற அச்சுறுத்தினர். இவைகளை எல்லாம் கடந்து நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போதும் அவரின் உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. பிறகு 2008 செப்டம்பர் 24 அன்று மற்ற நான்கு நபர்களுடன் மும்பை திறந்தவெளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர் 2008-இல் MCOCA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை மீண்டும், மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பிப்ரவரி 2009-இல் சிறப்பு MCOCA நீதிமன்றத்திற்கு அவர் அளித்த கடிதத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் கீழே காணலாம்:-
2008 ஆகஸ்ட் 27 அன்று மும்பை முற்றவெளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி என்னிடம் எந்த காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டிருக்கிறாய்? என்று கேட்டார். திருட்டு வழக்கில் என்று பதிலளித்தேன். என்னுடைய உறவினர்களை சந்திக்க அனுமதி கேட்டு மறுக்கப்பட்டேன். பிறகு வாடலவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு என்னுடைய இரு சகோதரர்களையும் வேறு வழக்குகளில் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்து சிறைவைப்போம் என்று மிரட்டினர்.
பிறகு ஒரு சில நபர்களுக்கு எதிராக குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சி சொல்லவேண்டும் என்று கூறினார். நான் அப்படி செய்தால் என்னை இவ்வழக்கிலிருந்து விடுவித்துவிடுவதாக ஆசை வார்த்தை ஊட்டினர். நான் மறுத்த போது குற்றப்பிரிவு எண் 3-இற்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு இரண்டு அல்லது மூன்று முறை மூர்ச்சையாகி விழுமளவுக்கு மின் அதிர்வை என் உடலில் செலுத்தினர். என்னைக் கொன்று விடுவதாகவும், என் உடலை என் உறவினர்களுக்கு கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று மிரட்டினர். என்னுடைய இரு சகோதரர்களையும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்வோம் என்று அதட்டினர். என்னை சிறைக் கொட்டடிக்கும் அழைத்து செல்லவில்லை. என் உறவினர்களை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. நீதி மன்றத்தில் ஏதாவது புகார் சொன்னால் என் சகோதரர்களையும் இங்கு கொண்டு வந்து வதைப்போம் என்று பயப்படுதினர். இவ்வாறு தவறாக புனையப்படும் ஒவ்வொரு திருட்டு வழக்கிலும் என்னை இணைத்து விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டேன். காவல் நிலைய விசாரணைக்கு நீதிபதி அனுமதிக்கவில்லை என்றால் என்னை சிறைக்கு அழைத்து செல்லமாட்டார்கள். மாறாக புதியதோர் திருட்டு வழக்கு மீண்டும் என்மீது புனையப்படும். இது போன்ற சித்திரவதை 30 நாட்களுக்கும் மேலாக எனக்கு நடந்தது.
2008 செப்டம்பர் 24 அன்று மற்ற நான்கு நபர்களோடு முற்றவெளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டேன்.
2008 அக்டோபர் 7 அன்று சிறப்பு MCOCA நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டேன். நான் மிகுந்த அச்சத்தில் இருந்ததால் என்னால் பேசக்கூட முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு DCP இடம் அழைத்து சென்றனர். அவரும் கூட என்னை இவ்வழக்கில் சாட்சி சொல்லவேணடும் என்றே சொன்னார். என்னுடைய விவரங்களை எல்லாம் விளக்கமாக அவரிடம் எடுத்துரைத்த பிறகு அவர் சொன்னார்: ஒரு நாள் அவகாசம் எடுத்து உன் சகோதரர்களை காப்பாற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என்று யோசித்து சொல் என்றார். மறு நாள் DCP என்னிடம் ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து என் பெயரை எழுதச் சொன்னார். நானும் எழுதினேன்.
நான் முற்றவெளி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, நீதிபதி ஒரு சில நபர்களின் பெயரைக்கூறி விபரம் கேட்டார். நான் தெரியாது என்றவுடன் நான் பெயரை எழுதிய தாளில் காவலர்களால் தயார் செய்யப்பட வாக்கு மூலத்தை என்னிடம் காட்டினார். நான் அதன் விளக்கத்தை நீதிபதியிடம் அளிக்கும்போது என்னை சித்திரவதை செய்த அதிகாரி என் முன்னே என்னை மிரட்டும் விதத்தில் நின்று கொண்டிருந்தார்.
அதன் பிறகு குற்றப்பிரிவு எண் 3-ற்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு எழுதப்பட்ட ஒரு தாளைக் கொடுத்து அதனை மனனம் செய்ய சொன்னார்கள். அடுத்த நாள் ஒரு காணொளி (video film) பதிவு செய்யப்பட்டது. நான் மறுத்த போது என் உடலில் மின் அதிர்வை செலுத்தி தீய வார்த்தைகளால் திட்டி மிரட்டினர்.
நான் குற்றமற்றவன். இவ்வழக்கில் இணைக்கப்பாட்டுள்ள மற்ற நபர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி. இதற்கு முன்பும் MCOMA வழக்கு என்மீது பதியப்பட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டேன். மீண்டும் என்மீது MCOCA வழக்கு பதியப்பட்டுள்ளது. நான் நீதிக்காக காத்திருக்கிறேன். முன் பின் பார்க்காத நபர்களைப்பற்றி நான் எவ்வாறு சாட்சி கூறமுடியும். முதலில் பதியப்பட்ட MCOCA வழக்கில் விடுதலையான பிறகு பதியப்பட்ட மற்ற இரு வழக்குகளில் பிணையில் விடப்பட்டு ஒவ்வொரு அழைப்பாணைக்கும் தவறாமல் ஆஜராகி வருகிறேன். ஆனால் நான் இப்பொழுது தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு மீண்டும் MCOCA வழக்கு என் மீது பதியப்பட்டுள்ளது.
நன்றி: TCN NEWS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக