அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

ரமழான் - 18

பத்ர் போர் - கைதிகள் பற்றிய முடிவு! 

நபி(ஸல்) அவர்கள் பத்ர் போர் முடிந்தவுடன் புறப்பட்டு ‘ஸஃப்ரா’ என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கு நழ்ர் இப்னு ஹாஸைக் கொன்றுவிடுமாறு அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். காரணம், இவன் பத்ர் போரில் எதிரிகளின் கொடியை ஏந்தியவன். இவன் குறைஷி குற்றவாளிகளில் ஒரு பெரும் குற்றவாளி! இஸ்லாமுக்கு எதிராகப் பெரும் சூழ்ச்சிகள் செய்தவன். நபி (ஸல்) அவர்களுக்கு கடும் நோவினை செய்தவன்.

பிறகு ‘இர்க்குல் ளுபியா’ என்ற இடத்தை அடைந்த போது உக்பா இப்னு அபூ முயீத்தையும் கொன்றுவிட ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். சிலர் அலீ (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு உக்பா செய்த தீங்கைப் பற்றி நாம் முன்பே கூறியிருக்கின்றோம். இவன்தான் நபி (ஸல்) தொழுகையில் இருந்த சமயம் அவர்களின் முதுகில் ஒட்டகத்தின் குடலைப் போட்டவன். நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக அவர்களின் கழுத்தைப் போர்வையால் இறுக்கியவன். அது சமயம் அபூபக்ர் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள். அவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளையிட்ட பின்பு அவன் நபியவர்களிடம் “முஹம்மதே! எனது பிள்ளைகள் என்ன ஆவார்கள்?” என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) “அவர்களுக்கு நெருப்புதான்” என்றார்கள்.(ஸுனன் அபூதாவூது)

இவ்விருவரும் இதற்குமுன் செய்த குற்றங்கள் மிக மோசமானவை மறக்க முடியாதவை. அதுமட்டுமல்ல இவர்கள் தங்களின் குற்றங்களுக்காக வருந்தவுமில்லை. இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இஸ்லாமிற்குக் கெடுதிகள் பல செய்வர். எனவே, இவர்களைக் கொல்வது அவசியமான ஒன்றே! கைதிகளில் இவ்விருவரைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) கொலை செய்யவில்லை.

நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் கைதிகளைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்” என்று கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் “கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்” என்று உமர் (ரழி) கூறினார்கள்.

அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

உமர் (ரழி) கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) “ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது” என்றார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)

பல கைதிகளை நபி (ஸல்) ஈட்டுத் தொகை இல்லாமலே உரிமையிட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முத்தலிப் இப்னு ஹன்தப், ஸைஃபி இப்னு அபூ ஃபாஆ, அபூ இஜ்ஜா ஜும ஆவர். இந்த அபூ இஜ்ஜா உஹதுப் போரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சண்டையிட்டான். போரின் இறுதியில் கைதியாகப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதன் விவரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் வர இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுடைய மருமகன் அபுல் ஆஸும் கைதிகளில் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மகளார் ஜைனப் (ரழி) தனது தாய் கதீஜா (ரழி) தனக்களித்த மாலையை ஈட்டுத் தொகையாக அனுப்பினார்கள். ஜைனப் (ரழி) அவர்களின் மாலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்களது உள்ளம் இரங்கியது. தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலையிட அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர “மகள் ஜைனப் (ரழி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். அவர் மக்கா சென்ற பிறகு ஜைனப் (ரழி) அவர்களை மதீனா அனுப்பினார். ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வர ஜைது இப்னு ஹாஸாவையும் மற்றும் ஒரு அன்சாரி தோழரையும் நபி (ஸல்) அனுப்பினார்கள். அவர்களிடம் நீங்கள் “பத்தன் யஃஜஜ் என்ற இடத்தில் தங்கியிருங்கள். ஜைனப் அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கிருந்து அவரை அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். அந்த இருவரும் அவ்வாறே சென்று ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வந்தார்கள். ஜைனப் (ரழி) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற வரலாறு மிக துயரமான நிகழ்ச்சியாகும். இப்பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் கேட்போரின் உள்ளங்களை உருக்கிவிடும்.

கைதிகளில் சுஹைல் இப்னு அம்ர் என்பவரும் இருந்தார். இவர் இலக்கிய நயத்துடன் பேசும் புகழ் பெற்ற பேச்சாளர். சில சமயங்களில் இஸ்லாமிற்கெதிராக பிரச்சாரம் செய்வார். எனவே, “அல்லாஹ்வின் தூதரே! இவனது இரண்டு முன்பற்களைக் கழற்றி விடுங்கள். இவன் அதிகம் பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எதிராக இவன் எந்தப் பிரசங்கமும் செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். உறுப்புகளைச் சிதைப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூடாது என்பதற்காகவும், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை பயந்தும் நபி (ஸல்) உமரின் இக்கோரிக்கையை நிராகரித்தார்கள்.

இப்போருக்குப் பின், உம்ரா செய்வதற்காகச் சென்ற ஸஅது இப்னு நுஃமான் (ரழி) அவர்களை அபூ ஸுஃப்யான் மக்காவில் சிறைபிடித்துக் கொண்டார். அபூ ஸுஃப்யானின் மகன் அம்ர் இப்னு அபூஸுஃப்யான் பத்ர் போரில் கைது செய்யப்பட்டு முஸ்லிம்கள் வசம் இருந்தார். ஸஅதை விடுவிப்பதற்காக அம்ரை அபூ ஸுஃப்யானிடம் சில முஸ்லிம்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அபூஸுஃப்யானும் தனது மகன் அம்ர் கிடைத்தவுடன் ஸஅதை விடுதலை செய்தார்.

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போரை விவரித்து குர்ஆனில் ‘அல் அன்ஃபால்’ என்ற அத்தியாயம் இறக்கப்பட்டது. நாம் கூறுவது சரியானால் “இந்த அத்தியாயம் இப்போரைப் பற்றிய இறைவிமர்சனம்” என்று கூறலாம். வெற்றி பெற்ற பிறகு அரசர்களும் தளபதிகளும் போரைப் பற்றி கூறும் விமர்சனங்களிலிருந்து இந்த இறைவிமர்சனம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

முதலாவதாக, முஸ்லிம்களுக்கு அவர்களிடம் இருந்த சில ஒழுக்கக் குறைவுகளை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களை உயர் பண்புகளால் முழுமைபெற செய்ய வேண்டும் குறைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதே!

இரண்டாவதாக, முஸ்லிம்கள் தங்களது வீரம் மற்றும் துணிவைப் பார்த்து தற்பெருமைக்கு ஆளாகிவிடக் கூடாது. மாறாக, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் தனக்கும் தனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவேதான் முஸ்லிம்களுக்கு மறைவிலிருந்து செய்த உதவியை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

மூன்றாவதாக, இந்த ஆபத்தானப் போரை நபி (ஸல்) அவர்கள் எந்த இலட்சியங்களையும், நோக்கங்களையும் முன்னிட்டு சந்தித்தார்களோ அவற்றை விரிவாக அல்லாஹ் கூறுகிறான். அதன் பிறகு போர்களில் வெற்றி பெறக் காரணமாக அமையும் தன்மைகளையும், குணங்களையும் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடுகிறான்.

நான்காவதாக, இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், போரில் கைது செய்யப் பட்டவர்கள் ஆகியோருக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். சத்தியத்திற்குப் பணிந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை.

ஐந்தவதாக, போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான்.

ஆறாவதாக, போரிடுவது அல்லது சமாதானம் செய்து கொள்வது ஆகிய இவ்விரண்டின் அடிப்படைகள் மற்றும் சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். அத்தகைய ஒரு காலக் கட்டத்தை அப்போது இஸ்லாமிய அழைப்புப்பணி அடைந்துவிட்டது என்பதே அதற்குக் காரணம். அதன் மூலமே முஸ்லிம்கள் புரியும் போருக்கும் அறியாமைக்கால மக்கள் செய்த போருக்கும் வேறுபாடு ஏற்படும் முஸ்லிம்கள் பிறரைப் பார்க்கிலும் தனித்தன்மை பெற்று, குணத்திலும் பண்பிலும் மேலோங்கி விளங்குவார்கள். மேலும், உலக மக்கள் இஸ்லாமை ஒரு தத்துவ சிந்தனையாக (சித்தாந்தமாக) மட்டும் பார்க்காமல், தான் அழைக்கும் அடிப்படைகளை கொண்டு தன்னைச் சார்ந்தோரைப் பண்பட செய்யும் ஒரு வாழ்க்கை நெறியாக இஸ்லாமைப் பார்ப்பார்கள்.

ஏழாவதாக, இஸ்லாமிய நாட்டுக்குரிய அடிப்படை சட்டங்களை அல்லாஹ் நிர்ணயிக்கின்றான். அதாவது, இஸ்லாமிய அரசாங்கத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையில் சட்ட வித்தியாசங்கள் உள்ளன என்பதே அது.

ஹிஜ் இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது, இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்’ எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது.

பத்ர் போரில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் கொண்டாடிய நோன்புப் பெருநாளே முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெருநாட்களில் முந்தியதும் மிகச் சிறந்ததுமாகும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி எனும் கிரீடத்தை அணிவித்த பின்பு, அவர்களுக்கு அவன் வழங்கிய இந்தப் பெருநாள் எவ்வளவு அதிசயத்தக்கது! தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்), லாயிலாஹஇல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)” என்று சப்தமிட்டுக் கூறியவர்களாக வந்து, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத அந்த தொழுகையின் காட்சிதான் எவ்வளவு அற்புதமானது! அல்லாஹ்வின் உதவியையும் அளவிலா அருளையும் பெற்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டன. அவனது நேசத்தையும் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள துடியாய்த் துடித்தன.

இதைத்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தில் நினைவூட்டுகிறான்:

நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்