டெல்லி பாபரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், பாபரி மஸ்ஜித் நின்றிருந்த 2.7 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியத்திற்கு வழங்கிட உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும், ஆதலால் அந்த நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் 2010 செப்டம்பர் 10 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் என்.எல்.கணபதி, ஆர்.சி.கப்ரியேல் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். செப்டம்பர் 2ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அப்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் ருபேந்தர் சூரி ஆஜராவார்.
முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு விசித்திரமானது என்று கூறி நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்தத் தீர்ப்பை இடைநிறுத்தம் (Stay) செய்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக