அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஆகஸ்ட் 24, 2011

ரமழான் - 24

லைலத்துல் கத்ர் - 2



எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே! அவனே, அந்தரங்கமான, பகிரங்கமான எல்லாவற்றையும் அறிபவன். முரடர்களின் முதுகை கூட வல்லமை கொண்டு முறிப்பவன். நீர்த் துளிகளைக் எண்ணிக் கணக்கிடுபவன்., அவை பெருவெள்ளமாகி நதியில் ஓடுகிறது. இரவில் இருள் படரச்செய்பவன்., அதிகாலை வெளிச்சம் அதனை அகற்றிவிடுகிறது! வழிபாடு செய்பவர்களுக்கு ஏராளமாய் நன்மை வழங்குபவன்., நிறைவாகக் கூலி கொடுப்பவன்! கண்களின் கள்ளத்தனத்தையும் நெஞ்சத்தில் மறைந்திருக்கும் இரகசியத்தையும் அறியக்கூடியவன்! எல்லாப் படைப்பினங்களுக்கும் பரவலாக உணவளிப்பவன். மணலில் ஊர்ந்து செல்லும் எறும்புக்கும் கூடுகளில் உள்ள குஞ்சுகளுக்கும் உணவளிக்காமல் அவன் விடவில்லை. அவனே செல்வத்தை வழங்குகிறான். ஏழ்மையைக் கொடுக்கிறான். செழிப்பும் வறுமையும் ஏற்படுவது அவனது ஞானத்தின் அடிப்படையிலேயே!

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை., அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்று சாட்சி சொல்கிறேன். இது வாய்மையான கொள்கையுடையவனின் தூய்மையான சாட்சியமாகும்.

அன்புச் சகோதரர்களே! பாக்கியமிக்க இந்தப் பத்து நாட்களில் தான் லைலதுல் கத்ர் எனும் அந்த இரவு உள்ளது. அல்லாஹ் இதனை ஏனைய இரவுகளைக் காட்டிலும் சிறப்பாக்கியுள்ளான். இந்த இரவில் ஏராளமான சிறப்புகளையும் நன்மைகளையும் வழங்கி இந்தச் சமுதாயத்தின் மீது அல்லாஹ் கருணை பொழிந்துள்ளாள். தெளிவான தனது வேதமாகிய குர்ஆனில் இதன் சிறப்பைத் வெகுவாகப் பாராட்டியுள்ளான்!

இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் நாம் இறக்கி வைத்தோம். ஏனெனில் மக்கனை எச்சரிக்கை செய்ய நாம் நாடியிருந்தோம். அது எத்தகைய இரவு எனில், அதில் தான் உறுதி மிக்க ஒவ்வொரு விவகாரத்திற்கும் தீர்ப்பு பெறப்படுகிறது! இது நம்மிடத்தில் நின்றும் உள்ள கட்டளையின் அடிப்படையிலானது. திண்ணமாக நாம்தான் (தூதரை) அனுப்பக் கூடியவர்களாய் இருந்தோம். இது உம்முடைய இறைவனின் கருணையாகும். திண்ணமாக அவன் அனைத்தையும் கேட்கக் கூடியவனாகவும் அறியக்கூடியவனாகவும் இருக்கிறான். அவனே, வானங்களுக்கும் பூமிக்கும் அவ்விரண்டுக்குமிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதி (என்பதை) உறுதியான நம்பிக்கை உடையவர்களாய் இருந்தால் நீங்கள் (காண்பீர்கள்!) அவனைத் தவிர வணக்கதிற்குரிய இறைவன் வேறுயாரும் இல்லை. அவனே உயிரையும் மரணத்தையும் கொடுக்கிறான். உங்கள் இரட்சகனும் அவனே. முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் மூதா தையர்களின் இரட்சகனும் அவனே!' (44:3-8)

இந்த இரவை அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த அளவுக்கு இதன் நன்மையும் நற்பாக்கியமும் சிறப்பும் ஏராளம் உள்ளன. இந்த இரவின் பாக்கியம் என்னவெனில், சிறப்புக்குரிய இறைவேதம் குர்ஆன் இந்த இரவில்தான் இறக்கியருளப்பட்டது என்பதாகும்.

மேலும் இந்த இரவில் உறுதிமிக்க ஒவ்வொரு விவகாரமும் பெறப்படுகிறது என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதாவது, இந்த ஆண்டு முழுவதும் - அல்லாஹ்வின் கட்டளையினால் நிகழவிருக்கும் ரிஜ்க் எனும் வாழ்வாதாரங்கள் வாழ்க்கைத் தவணைகள், நன்மைகள் - தீமைகள் போன்ற அனைத்தும் லௌஹுல் மஹ்ஃபூழ் எனும் மூல ஏட்டிலிருந்து பெறப் பட்டு எழுத்தர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன! உறுதிமிக்க ஒவ்வொரு விவகாரம் என்பது அல்லாஹ்வுடைய உறுதிமிக்க கட்டளைகளாகும். எப்படிப்பட்ட உறுதியான கட்டளைகள் எனில், அவற்றில் எவ்வித இடையூறோ குறைபாடோ மூடத்தனமோ வீண்நிலையோ கிடையாது. யாவற்றையும் மிகைத்தவனும் பேரறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப் பட்டவையாகும் அவை!

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: 'திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) லைலத்துல் கத்ர் எனும் மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். மாட்சிமைமிக்க அந்த இரவு என்ன என்று உமக்குத் தெரியுமா? மாட்சிமைமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். அதில் மலக்குகளும் ரூஹும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் சாந்திமயமாகத் திகழ்கிறது., வைகரை உதயமாகும் வரை' (97 : 1 - 5)

(லைலத்துல் கத்ரில் உள்ள) கத்ர் என்பதன் பொருள், சிறப்பு, கண்ணியம்;. அல்லது இறைவன் நிர்ணயித்த விதி - தீர்ப்பு என்பதாகும். ஏனெனில் லைலதுல் கத்ர் இரவு சிறப்பும் மாண்பும் உடையது. மேலும் அந்த ஆண்டு முழுவதும் நிகழவிருக்கும் தன்னுடைய உறுதிமிக்க கட்டளைகளை அல்லாஹ் இந்த லைலத்துல் கத்ர் இரவில் நிர்ணயிக்கிறான்., தீர்ப்பளிக்கிறான்.

லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்களைவிடவும் சிறந்ததாகும் - அதாவது, சிறப்பு, மாட்சிமை, ஏராளமான நன்மை - நற்கூலி ஆகியவற்றைப் பொறுத்து சிறந்த இரவாகும். இதனால்தான் எவர் லைலதுல் கத்ர் இரவில் ஈமானுடனும் மறுமையின் நற்கூலியை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.

மலக்குளும் ரூஹும் அதில் இறங்குகிறார்கள் - மலக்குகள் என்போர் அல்லாஹ்வுடைய அடியார்களில் ஒருபிரிவினர்! இரவு பகல் எந்நேரமும் அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்கள்.

அவர்கள் கர்வம் கொண்டு அவனுக்கு இபாதத் - வழிபாடு செய்ய மறுப்பதில்லை., களைத்துப் போவதுமில்லை. இரவு-பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதிபாடிக் கொண்டேயிருக்கிறார்கள்., சோர்வடைவதில்லை!

அந்த மலக்குகள் லைலத்துல் கத்ர் இரவில் - நன்மைகள், அருட்பாக்கியங்கள், அருட்கொடைகள் ஆகியவற்றுடன் பூமியில் இறங்குகிறார்கள். இங்கு இடம் பெற்றுள்ள ரூஹ் எனும் சொல் ஜப்ரீலை குறிக்கும். அவரது சிறப்பையும் உயர்வையும் கவனித்து அவரது பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரவு முழுவதும் சாந்திமயமாகத் திகழ்கிறது அதாவது அனைத்து விதமான அச்சுறுத்தல்களை விட்டும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிம்மதியும் சாந்தியும் அளிக்கக் கூடியதாக இந்த லைலத்துல் கத்ர் இரவு திகழ்கிறது. இதில் ஏராளமான மனிதர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்., அதன் வேதனையிலிருந்து ஈடேற்றம் அடைகிறார்கள் எனும் அடிப்படையில்!

வைகரை உதயமாகும் வரை - அதாவது, லைலத்துல் கத்ர் எனும் இரவு வைகரையின் உதயத்துடன் முடிவடைகிறது., இரவு அமல்கள் அத்துடன் முடிவடைந்து விடுவதனால்!

இந்த அத்தியாயத்தில் லைலத்துல் கத்ரு இரவுக்கு பல்வேறு சிறப்புகள் எடுத்துரைக்கப்படுள்ளன!

(1) மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடிய -அவர்களின் இம்மை மறுமையின் நற்பேறாகத் திகழ்கிற திருக்குர்ஆனை அல்லாஹ் இந்த இரவில்தான் இறக்கியருளினான்!

(2) மாட்சிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? என்று இந்த வசனத்தில் கேள்வி கேட்டு அதன் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அல்லாஹ் எடுத்துரைக் கிறான்.

(3) அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு.

(4)அந்த இரவில் மலக்குகள் இறங்குகிறார்கள். நன்மைகள் அருட்பாக்கியங்கள், கருணைகள் ஆகியவற்றுடன் அது அமைகிறது!

(5) அந்த இரவு சாந்திமயமாகத் திகழ்கிறது., தண்டனை மற்றும் சோதனையிலிருந்து அதில் அதிக அளவு ஈடேற்றம் கிடைக்கிறது., அடியான் அதில் மேற்கொள்ளும் வழிபாட்டின் விளைவாக!

(6) இந்த இரவின் சிறப்பு குறித்து எடுத்துரைக்கும் ஓர் அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கியருளி அது மறுமைநாள் வரை ஓதப்பட்டுவருகிறது!

லைலைத்துல் கத்ரின் மற்றொரு சிறப்பு ஸஹீஹுல் புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ள நபிமொழியில் கூறப்பட்டிருப்பதாகும்.

அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'விசுவாசத்துடனும் மறுமை நன்மையை எதிர்பார்த்தும் எவர் லைலத்துல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன' (நூல்:புகாரி, முஸ்லிம்)

ஈமானுடன் தொழுவது என்றால் அல்லாஹ்வின் மீதும் இந்த இரவில் தொழக்கூடியவர்களுக்கு அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள மறுமை நலன்கள் மீதும் நம்பிக்கை கொண்டு என்று பொருள்.

எதிர்பார்ப்புடன் தொழுவது என்றால் நற்கூலியையும் நன்மையையும் எதிர்பார்த்து என்று பொருள். இந்த இரவை அறிந்தவர்களுக்கும் இந்தச்சிறப்பு கிடைக்கும். அறியாதவர்களுக்கும் கிடைக்கும். ஏனெனில் இந்தக்கூலி கிடைக்கும் விஷயத்தில் இந்த இரவை அறிந்திருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் நிபந்தனை விதிக்கவில்லை!

லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் உள்ளது. ஏனெனில் அந்த இரவில் அல்லாஹ் குர்ஆனை இறக்கியருளினான். மேலும் அதை இறக்கியது ரமளான் மாதத்தில்தான் என்றும் அறிவித்துள்ளான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்: 'திண்ணமாக நாம் அதை லைலத்துல் கத்ர் இரவில் இறக்கியருளினோம்'-வேறோர் இடத்தில், - 'ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது' எனக் கூறுகிறான். இவ்விருவசனங்களில் இருந்தும் - லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தில்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.

லைலத்துல் கத்ர் இரவு முந்தைய எல்லாச் சமுதாயங்களிடமும் இருந்தது. இந்தச் சமுதாயத்திமும்- மறுமைநாள் வரையிலும் நீடித்திருக்கும். ஏனெனில் அபூ தர்ரு(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:

நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள்., அது ரமளான் மாதத்தில் உள்ளதா? வேறு மாதத்தில் உள்ளதா? என்று! அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்: இல்லை., அது ரமளான் மாதத்தில் தான் உள்ளது.

பிறகு, நபிமார்கள் வாழும் வரையில் அவர்களுடன் அது இருக்கும். அவர்கள் மரணம் அடைந்து விட்டால் அத்துடன் அந்த இரவும் எடுபட்டுவிடுமா? அல்லது மறுமை நாள் வரை நீடிக்குமா? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் சொன் னார்கள்: இல்லை., அது மறுமை நாள் வரையிலும் நீடிக்கும். (நூல்: முஸ்னத் அஹ்மத், நஸாஈ)

(இமாம் ஹாகிம்; இதனை அறிவித்துள்ளார்கள். மேலும்சொன்னார்கள்: இது முஸ்லிம் இமாமின் நிபந்தனையின்படி ஸஹீஹ் ஆகும். ஆயினும் புகாரியும் முஸ்லிமும் இதனை அறிவிக்கவில்லை. தஹபி அவர்கள் இதனை ஆமோதித்துள் ளார்கள்.)

ஆனாலும்(அல்லாஹ்வே மிக அறிந்தவன்) லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பும் கூலியும் இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தம். ஜும்ஆ நாளின் சிறப்பு உள்ளிட்ட சில சிறப்புகள் இந்தச் சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமாக இருப்பதுபோன்று! அல்லாஹ்வுக்கே எல்லாhப் புகழும்!

ரமளான் மாதத்தில் கடைசிப்பத்து நாட்களில்தான் லைலத் துல் கத்ர் இரவு உள்ளது.ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் சொன் னார்கள்:

லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் பிந்திய பத்து நாட்களில் முனைந்து தேடிப்பெறுங்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

அந்த இரவு, இரட்டைப்படை இரவுகளைவிட ஒற்றைப் படை இரவுகளில் இருப்பதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவை முனைந்து தேடிப்பெறுங்கள். (நூல்: புகாரி)

அதுவும் -அந்த இரவு கடைசி ஏழுநாட்களில் இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது. ஏனெனில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: லைலத்துல் கத்ர் இரவு கடைசி ஏழு நாட்களில் இருப்பதாக நபித்தோழர்கள் சிலருக்கு கனவு காண்பித்துக் கொடுக்கப்பட்டது. அது குறித்து நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்கள் அனைவரின் கனவும் கடைசி ஏழு நாட்களில் என ஒத்திருப்பதை நான் காண்கிறேன். எனவே லைலதுல் கத்ர் இரவை முனைந்து தேடிப் பெறுபவர் கடைசி ஏழுநாட்களில் அதை முனைந்து தேடிப் பெற்றுக் கொள்ளட்டும்' (நூல்: புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரலி)அவர்களின் மற்றோர் அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதனை (லைலத்துல் கத்ர் இரவை) கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். ஆயினும் உங்களில் ஒருவர் பலவீனம் அடைந்தாலோ இயலாது போனாலோ மீதி எழுநாட்களில் அவர் தோற்றுப் போய்விட வேண்டாம்'

லைலத்துல் கத்ர் இரவென்பது எல்லா ஆண்டுகளிலும் ஒரு குறிப்பிட்ட இரவுக்கு மட்டும் சொந்தமல்ல., அது மாறிமாறி வந்து கொண்டிருக்கிறது என்பiதே உண்மை! எடுத்துக்காட்டாக, ஒரு ஆண்டில் 27ம் இரவு லைலத்துல் கத்ர் இரவு என்றால் மறுஆண்டு 25ம் இரவில் வரும். இப்படி வருவது அல்லாஹ்வின் நாட்டப்படியும் அவனது அறிவுஞானத்தின் படியும் அமைவதாகும். பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கிறது:

லைலதுல் கத்ர் இரவை எஞ்சியுள்ள ஒன்பதாவது நாளிலோ எஞ்சியுள்ள ஏழாவது நாளிலோ எஞ்சியுள்ள ஐந்தாவது நாளிலோ தேடுங்கள்! (நூல்: புகாரி)
ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரி எனும் நூலில் சொல்லியுள்ளார்கள்: மிகையான கருத்து என்ன வெனில், கடைசிப் பத்தில் ஒற்றைப்படையில் லைலதுல் கத்ர் இரவு உள்ளது., அது (ஆண்டுக்கு ஆண்டு) மாறி வருகிறது என்பதாகும்.

அது எந்த இரவு என்கிற விவரத்தை அல்லாஹ்தன் அடியார்களை விட்டும் மறைத்துவிட்டான். இது ஒருவகையில் அவர்களுக்குச் செய்த கருணையாகும். இதன் நோக்கம் சிறப்புக்குரிய அந்த இரவில் தொழுகை, திக்ர், துஆ ஆகியவற்றின் மூலம் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப்பெறுவதற்காக அவர்கள் அதிக அளவில் அமல்கள் செய்யவேண்டும்., அல்லாஹ்வின் பால் நெருக்கத்தையும் நன்மையையும் அவர்கள் அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும்.

அல்லாஹ் இந்த இரவை மறைத்து வைத்ததன் மற்றொரு நோக்கம் அவர்களைச் சோதிக்கவேண்டும் என்பதாகும். அந்த இரவைத் தேடுவதில் வினையமாகவும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவர் யார்? என்பது தெளிவாகத் தெரிய வேண்டும்! ஒரு பொருளில் ஆர்வம் கொள்பவர் அதைத் தேடுவதில் முனைப்பாக ஈடுபடுவார்., அதனை அடையும் வழியில் களைத்துப் போவதைப் பெரிதுபடுத்தமாட்டார்.

லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை அடியார்களில் சிலருக்கு அல்லாஹ் வெளிப்படுத்துவான்., அவர்கள் காணக்கூடியதான சில அடையாளங்களின் மூலம்! நபி(ஸல்) அவர்கள் அதன் அடையாளத்தைக் கனவில் கண்டதுபோன்று! அந்த இரவின் அதிகாலையில் தண்ணீரிலும் மண்ணிலும் தாம் ஸுஜூது செய்வதாக நபி(ஸல்) அவர்கள் கனவு கண்டார்கள். அவ்வாறே அந்த இரவில் மழை பொழிந்தது! ஃபஜ்ர் தொழுகையில் மழை நீரிலும் மண்ணிலும் அவர்கள் ஸுஜூது செய்தார்கள்!

அன்புச் சகோதரர்களே! லைலத்துல் கத்ர் இரவில் வாசல் திறக்கப்படுகிறது. நேசர்களுக்கு (இறைவன் பால்) நெருக்கம் ஏற்படுத்தப்படுகிறது. பிரார்த்தனைகள் செவியேற்கப்பட்டு பதிலும் அளிக்கப்படுகிறது. இந்த இரவில் அமல் செய்பவர்களுக்கு மகத்தான கூலி எழுதப்படுகிறது. லைலத்துல்கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது! எனவே அதனைத் தேடுவதில் அழுத்தமான முயற்சியை மேற்கொள்ளுங்கள்! இதுதான் தேடுவதற்கான காலம்! அலட்சியத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அலட்சியத்தில் அழிவு உள்ளது!

யா அல்லாஹ்! யார் இம்மாதத்தில் நோன்பு நோற்று லைலத்துல் கத்ர் இரவை அடைந்து ஏராளமான நன்மைகளையும் நற்கூலிகளையும் வென்றார்களோ அவர்களின் குழுவில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

யா அல்லாஹ்! நன்மையின் பக்கம் விரைந்த செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவனத்து மாளிகைகளில் நிம்மதியாகத் தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்ப்பாயாக! எவர்கள் மீது நீ கருணை பொழிந்தாயோ- தீமைகளை விட்டும் எவர்களைக் காத்தாயோ அவர்களின் குழுவில் எங்களைச் சேர்ப்பாயாக!

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்தக்கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்யாயாக! வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அனைத்து மானக்கேடான செயல்களை விட்டும் எங்களைத் தூரப்படுத்துவாயாக!

யா அல்லாஹ்! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடிய, அழகாய் உனக்கு வழிபடும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! மேலும் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களை இணைத்து வைப்பாயாக! இம்மையிலும் எங்களுக்கு நன்மை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மை வழங்குவாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக! கருணைமிக்க இறைவனே! உனது கருணை கொண்டு - எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்