அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 16

ஒரு  மனிதன் ஒரு பட்டாளம் 
"அஹ்மதுல்லாஹ் ஷாஹ்"

மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்சென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அறியாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர் தான் அதிதீவிர தேசபக்தரான மௌலவி அஹமதுஷா என்பவர். 

அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. - என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகிதான் மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.

சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.
புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பபதந்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர்.  

சுதந்திரப் பிரச்சாரம் :

லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். 

''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது'' - என்றார். 

ஆங்கில அரசு வதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 

சிறையை உடைத்து...

1857 - இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். 

ராணுவ யுத்த நிபுணராக...

சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். ராணுவத் தளபதியாக செயல்பட்டார்.

சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது.

இவர்  பல முறை கொரில்லா தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை திணறவைத்த மாவீர ஆவார்.

இவரை இரண்டாவது முறை சிறை பிடிக்க முடியாத வெள்ளையர்கள் இவரது தலைக்கு வெள்ளிக்காசுகளை வலை பேசியது.

தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.
 
ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌலவி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.

ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். அந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 - இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். 
மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌலவி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். 

ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். 

தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ரவரி 15 - இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.

கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல்
கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். 

ஆனால் மௌலவியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌலவியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.

அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது:  

புரட்சிக்காரர்களின்... தலைவரான பைசாபாத் மௌலவி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர். ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.

அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற
கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். 

இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.

தேச துரோகியின் சூழ்ச்சியில்...

அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். 

ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். 

அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோட்டைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். 

சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌலவி, தப்பிக்க முயற்சிக்கும் முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட... தோட்டாக்களை மார்பில் ஏந்தி 1858 ஜூன் 15 -ல் மண்ணில் சாய்ந்து, வீர மரணம் அடைந்தார்  மௌலவி அஹமதுல்லா ஷாஹ்.

ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர்.
 

மௌல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். 

அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். 

இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்பெருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. 

அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.

ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.

மௌலவி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி :
 

இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. 

ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். 

தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. - என்று குறிப்பிட்டுள்ளது உண்மை... வெறும் புகழ்ச்சி இல்லை!

இந்திய  தேசத்திற்காக துறப்பதற்கு தன்னுயிர் தவிர வேறு செல்வமில்லை என தன்னையே அர்பணித்த மௌலவி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் வீரத்தை யாராலும் அளவிட முடியாது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்