நன்மையின் களஞ்சியம் இஃதிகாஃப்
புனித ரமலான் மாதத்தின் முதல் இருபது நோன்புகளை முறையாக நோற்ற நிலையில், ஈமானை உறுதியாக்கிக் கொண்டும் இறைவனை நெருங்க வைக்கும் அமல்களை அதிகப் படுத்திக் கொண்டும் பழகியுள்ளோம்.
இப்பயிற்சியின் மூலம் பெற்ற இறையச்ச உணர்வினையும் அதன் விளைவாக உலகத்தினை அணுகும் கண்ணோட்டமும் தமது வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு ஒருவர் வாழ்ந்தால் அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அவரால் எந்த விதத் தீமையோ பாதிப்போ ஏற்படாது என்பது திண்ணம்.
ரமளான் நோன்பு எனும் இந்த ஆன்மீகப் பயிற்சியைக் கொண்ட நோன்புகளை நோற்ற நிலையில் முஸ்லிம்கள், இப்புனித மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் தற்பொழுது உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்! - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!.
இஃதிகாஃப் - ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கடைபிடித்துள்ளார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் ரமளானின் இறுதி இருபது நாட்கள் இந்த அமலைச் செய்துள்ளார்கள். அவ்வளவு சிறப்புகுரிய நன்மை பெற்றுத்தரத்தக்க அமல் தான் இந்த இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருக்கும் அமலாகும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.
ரமளானின் இறுதி பத்தில் செய்ய வேண்டிய இந்த சிறப்பான அமலினால் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் என்பது, இவ்வுலகிற்கு அருள் கொடையான திருகுர்ஆன் இறக்கியருளப்பட்ட அந்த மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு கிடைக்கப்பெறுவதாகும்.
லைலத்துல் கத்ரு எனும் ஆயிரம் மாதங்களுக்கு நிகரான மகத்துவமிக்க அந்த இரவைப் பெற்று, இவ்வுலக அற்ப வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நின்று வணங்கினாலும் கிடைக்கப்பெறாத அளவுக்கு ஆயிரம் மாதங்கள் வணக்கத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகளை வாரிக் கூட்டத் துணைபுரியும் இஃதிகாஃப் எனும் இந்த விசேஷ அமலை - நபிவழியை முஸ்லிம்கள் அனைவரும் இயன்றவரை ஹயாத்தாக்க முனைய வேண்டும். இந்நாட்களில் இரவுத் தொழுகைகளுக்கு (கியாமுல் லைல்/தஹஜ்ஜுத்) முயல்வது நபிவழியைப் பேணுவதில் சிறப்புக்குரிய செயலாகும்.
அளவிட முடியாத அளவிற்கு நன்மைகள் கிடைக்கக் கூடிய, நிரந்தரமான மறுமையில் நிலையான நிம்மதி வாழ்விற்கு உறுதுணை புரியும் இந்தப் பாக்கியமிக்க நபிவழி அருகி வருவது கைசேதமாகும். இஃதிகாஃப் எனும் இந்த அரிய வணக்கத்தை மறந்தவர்களாக ஆங்காங்கே யாரோ ஒரு சிலர் பள்ளிக்கு ஒருவர் இருவர் என்று இஃதிகாஃப் இருக்கும் நிலை மாறி அதிகமானோர் இதை செயல் படுத்தி முஸ்லிம்கள் அனைவரும் வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக!
இன்ஷா அல்லாஹ் நாளை, லைலத்துல் கத்ர் இரவு மற்றும் இஃதிகாஃபினைக் குறித்து மேலும் விரிவாகக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக