ஹைதராபாத்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆந்திர
மாநிலத் தலைவர் முகம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
காவல்துறையின் கூடுதல் பொது இயக்குனர் (உளவுத்துறை, ADGP) வெளியிட்டுள்ள
சர்ச்சைக்குரிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று
முதல்வரையும், உள்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களால் ரமலான் மாதத்தில்
பெறப்பட்ட ஜகாத் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு சர்ச்சைக்குரிய
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமுதாய மக்களால் துவங்கப்பட்ட சமூக பேரியக்கம் தான்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. சமூகத்தை சக்திப்படுத்த பல்வேறு
மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது பதிவு செய்யப்பட்ட
இயக்கமாக, டெல்லியில் தேசிய தலைமையகத்தையும், கர்நூலில் மாநில
தலைமையகத்தையும் கொண்டுள்ளது. கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு,
சமூக சேவை, இயற்கை சீற்றங்களின்போது நிவாரண உதவி போன்றவற்றை ஆந்திர மாநிலம்
உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான மக்கள் நலப் பணிகளைச்
செய்து வருகிறது. அநீதி இழைக்கப்படும் மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத்
தரவும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்கும்
மதவாத, பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பது
வெளிப்படையான உண்மையாகும். உண்மைகள் இவ்வாறிருக்க, மாநில காவல்துறை
பாப்புலர் பிரண்டின் ரமலான் நிதி சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய
உத்தரவிட்டிருப்பது மிகுந்த பாரபட்சமாகவும், ஆட்சேபத்திற்கு உரியதாகவும்
உள்ளது. மேலும், ஜகாத் கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு
செய்வதென்பது மத சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை
மீறும் செயலாகும்.
பாப்புலர் பிரண்ட் தடை செய்யப்படவும் இல்லை, மறைமுகமாகச் செயல்படுவதும்
இல்லை. இதன் உறுப்பினர்களில் ஒருவரைக்கூட பயங்கரவாத வழக்குகளில்
பதியப்பட்டதில்லை. இந்த அமைப்புக்கு வேறு எந்த வெளிநாட்டு தீவிரவாத அல்லது
மற்ற அமைப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் உளவுத்துறையை மேற்கோள்
காட்டி வெளிவரும் செய்திகள், "பாப்புலர் பிரண்ட் பயங்கரவாத நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதாகவும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளோடு அதற்குள்ள
தொடர்புக்கு தெளிவான சான்றுகள் இல்லை" என்றும் தெரிவிக்கின்றன. இது போன்ற
எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகள் உண்மையிலேயே காவல் துறையின்
மூலமாகத்தான் வெளியாகின்றது என்றால் இது போன்ற வேலைகளை காவல் துறையின் உயர்
பதவிகளில் ஊடுருவியுள்ள பாசிச சிந்தனை கொண்ட கயவர்களின் வேலையாகத் தான்
இருக்கும்.
காங்கிரசின் தலைமயிலான மத சார்பற்ற அரசு ஆந்திர மாநிலத்தை நிர்வகித்து வருகிறது என்றாலும், அம்மாநில காவல் துறை மத சார்பு வாதத்தோடும், சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்துவருவதும் துரதிஷ்டவசமாக இது முதல் முறையாக நடந்தது அல்ல. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு விசாரணை என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லிம்களை சிறைப்பிடித்து, சித்திரவதை செய்தனர். உண்மையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்புகள் தான். முஸ்லிம்களின் மத உரிமையான ஜகாத் விநியோகித்தலைப்பற்றி தேவையற்ற கவனத்தை எடுத்துக் கொள்ளும் இந்த உளவுத் துறை, பல்வேறு ஹிந்துத்துவ மத அமைப்புகளுக்கு பணம் வந்து குவியும் வழிகளைப் பற்றி பாராமுகமாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது.
ஆந்திர மாநில காவல் துறையின் உளவுத்துறையில் ஊடுருவியுள்ள மதவாத பாசிச முகவர்களை களையெடுக்க வேண்டும் என்று முஹம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர காவல் துறையின் மத சார்பு போக்கை தடுக்கத் தவறினால், சிறுபான்மை சமூக அமைப்புகளையும், மனித உரிமை குழுக்களையும் ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக