சென்னை:தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2012-13 நிதியாண்டு பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது என்று SDPI தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் எந்த உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மின்வெட்டின் காரணமாக இருளில் மூழ்கி இருக்கும் தமிழகத்தில் அதனை உடனடியாக சரி செய்வதற்கான தீர்வுகள் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை.
குண்டு மின்சார பல்புகளை ஒழிக்கும் திட்டத்தையோ அல்லது மின்சார விரயத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தையோ அறிவித்திருந்தால் கூடுதல் மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கும்.
அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு 20,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நலிந்து போயிருக்கும் உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க உருப்படியான திட்டம் இல்லை.
பட்ஜெட் குறித்து முதல்வர் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், பட்ஜெட்டின் அறிவிப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறவில்லை.
ஏற்கனவே பல்வேறு வகையான உயர்வும், சொத்து மதிப்பு உயர்த்தப்படுவதும் பொது மக்களைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோல் அரசு நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகள், அரசுத் துறையில் புரையோடிப்போய் கிடக்கும் லஞ்ச லாவண்யங்களை ஒழிப்பது குறித்து எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றத்திற்குரியது.
முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அரசு, நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு சொத்துக்களை மீட்க திட்டமிடாதது வருந்தத்தக்கது.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி அறிவிப்புகள் இல்லாதது முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில்துறையினர், முஸ்லிம்கள் என பொது மக்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது.
இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள், கோதுமை மற்றும் ஓட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களுக்கு வரி நீக்கம் ஆகியவை வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.