அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், அக்டோபர் 01, 2012

1870 பணியிடங்கள் நிரப்ப 9.8 லட்சம் பேர் எழுதிய வி.ஏ.ஓ தேர்வில் 20 சதவீதம் பேர் ஆப்செண்ட்

தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வை 9.8 லட்சம் பேர் எழுதினர். குளறுபடிகள் நடக்காமல் தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,870 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த ஜூலை 9ம் தேதி வெளியிட்டது. அதன்படி, விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணி வரை நடந்தது.


மாநிலம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3,483 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 250க்கும் அதிகமான மையங்களில் தேர்வு நடந்தது. பிரச்னைக்கு உரியதாக கருதப்பட்ட 150 மையங்களில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வாளர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வு மையங்கள் வீடியோ கேமரா மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. வினாத்தாள்கள் எந்த விதத்திலும் வெளியாகாமல் இருக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் வினாத்தாள் தேர்வு கூடத்துக்கு எடுத்து வரப்பட்டடு, சீல் பிரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

தேர்வுக்கூடங்களை மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ், செயலர் உதயசந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர் நேரடியாக பணியில் நியமிக்கப்படுவார்கள். சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த விஏஓ தேர்வை பார்வையிட்ட பின் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வு எந்தவித பிரச்னை இல்லாமல் நடந்தது.

அதிகபட்சமாக சென்னையில் 70 ஆயிரம் பேர், மதுரையில் 52 ஆயிரம், நெல்லை, சேலத்தில் 51 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 4.21 லட்சம் பேர் பெண்கள். தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் அனைத்தும் உடனடியாக சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்குள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து விடும்.

அதன் பின்னர், விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு எழுதியோர் அதனை பார்த்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

20 சதவீதம் பேர் ஆப்சென்ட்:  நேற்று நடந்த தேர்வை சுமார் 80 சதவீதம் பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 20 சதவீதம் பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 74.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.

இன்று பிற்பகல் வினாவிடை

விஏஓ தேர்வுக்கான வினா விடை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில்  வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து விடைகளில் திருத்தம் இருந்தால் அதுபற்றிய விவரம் இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்படும். அதன் பிறகே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைக்குழந்தையுடன் வந்த பெண்கள்

விஏஓ தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பட்டதாரிகள், இன்ஜினியர்கள் என பலர் போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் குழந்தையை கணவர் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றனர். தேர்வு மையங்களுக்கு வெளியே குழந்தைகளுடன் பலர் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கினாலும் 8 மணிக்கே பலர் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். காலை 10.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு முடிந்து பிற்பகல் 1 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பொது தமிழ் எளிது; பொது அறிவு கடினம்

தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது: பொது அறிவு 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் 4 பதில் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு வினாவுக்கு 1.5 மார்க் வீதம் 200 வினாக்களுக்கு 300 மார்க்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

பொது தமிழ் வினாவில், ‘விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்து எழுது, அகர வரிசைப்படி எழுது என்று அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், 24 கேரட் தங்கத்தில் உள்ள தங்கத்தின் சதவீதம் எவ்வளவு, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு எந்த நாட்டில் இருந்து அதிகமாக பெறப்படுகிறது?, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது என்ற ஈஸியான கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டிருந்தது. இதனால், எளிதாக விடை அளிக்க முடிந்தது. அதே போல், பொது அறிவு பிரிவில் அதிகமான வினாக்கள் கடினமாக இருந்தன. அதனால், வினாக்களுக்கு பதில் அளிக்க மிகவும் சிரமமாக இருந்தது என்று அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்