அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், பிப்ரவரி 29, 2012

வேளச்சேரி எண்கவுண்டர் - உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

சென்னை: கடந்த 22ஆம் தேதி அன்று சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் என்று கூறப்பட்டு 5 வாலிபர்கள் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தியாவில் பல இடங்களிலும் வங்கிகளை உடைத்து லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்திருப்பதாகவும், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

இருப்பினும் இந்த எண்கவுண்டர் சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடுமட்டுமல்லாமல் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஒருவரின் குடும்பாத்தாரிடம் விசாரணை செய்த போது காவல்துறையினர் கூறியதற்கு முரணான பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே இது தொடர்பான் உண்மையை கண்டறியும் விதத்தில் என்.சி.ஹெச்.ஆர்.ஓ உட்பட இன்னும் சில அமைப்புகள் சார்பாக 9 நபர்கள் கொண்ட குழு பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
உண்மை கண்டறியும் குழு தனது விசாரணையை தொடங்கிய போது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அவர்களை விசாரணை செய்வதை தடுத்து வந்தனர். இதனால் மாநகர காவல்துறை ஆய்வாளர் திரிபாதியை சந்தித்து அவர்களுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தனர்.

உண்மை கண்டறியும் குழு தங்களுடைய இடைக்கால அறிக்கையை பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது வெளியிட்டது. எட்டு பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் வைத்து பேராசிரியர் மார்க்ஸ் வெளியிட்டார்.


1. பேராசிரியர் மார்க்ஸ் (பீப்புல்ஸ் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் (பி.யு.ஹெச்.ஆர்)

2. பேராசிரியர் பிரபா கல்விமணி - பீப்புல்ஸ் எடுகேஷன் மூவ்மென்ட், திண்டிவனம்

3. கோ. சுகுமாரன் - ஃபெடெரேஷன் ஆஃப் ரைட்ஸ் (எஃப்.பி.ஆர்), புதுச்சேரி

4. வழக்கறிஞர் ரஜினி - பி.யூ.ஹெச்.ஆர், மதுரை

5. மதுமிதா டத்தா - கேம்பைன் ஃபார் பீஸ் அன்டு ஜஸ்டீஸ் (சி.பி.ஜே), சென்னை

6. சங்கர ராமன் சுப்பிரமணியன் - பத்திரிக்கையாளர், சென்னை

7. வழக்கறிஞர் ஏ.ஸ். அப்துல் காதர் - மாநில மக்கள் தொடர்பாளர், என்.சி.ஹெச்.ஆர்.ஓ

8. நிர்மலா - மூவ்மெண்ட் அகைன்ஸ்ட் செக்ஸுவல் எக்ஸ்பிலாய்டேஷன், (எம்.ஏ.எஸ்.ஈ.எஸ்), சென்னை

9. சந்திரா - பத்திரிக்கையாளர், சென்னை

கோரிக்கைகள்:

1. கொள்ளைக்காரர்கள் என்று கூறப்படுபவர்களை கைது செய்வதற்கு வாய்புகள் இருந்தும் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினர் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவருமே சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளதால் உண்மையிலேயே அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்ற சந்தேகத்திற்கு விடை கிடைக்காமல் போயுள்ளது. இப்பேற்பட்ட சட்டத்திற்கு புரம்பான எண்கவுண்டர்களால் வழக்கின் உண்மை நிலை அறியப்படாமல் காவல்துறையினரால் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. காவல்துறையினரின் இத்தகைய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த எண்கவுண்டரில் ஈடுபட்ட அனைத்து காவல்துறையினர் மீது உரிய பிரிவில் கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும்.

2. பொதுமக்கள் மத்தியில் இது ஒரு போலி எண்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. சி.பி.சி.ஐ.டியினர் இது தொடர்பாக உண்மையை கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இவ்வழக்கை சி.பி.ஐற்கு மாற்றப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 5 நபர்கள் எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூரமானது ஆகும். இச்சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து பரீசீலனை செய்து உயர் நீதி மன்ற நீதிபதியும் நேரடி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3. மனித உரிமை கமிஷனின் விதியின் படி மாநகர காவல்துறை ஆய்வாளர் திரிபாதி, துணை ஆய்வாளர் சண்முக ராஜேஸ்வரன், கூடுதல் ஆய்வாளர் தாமரைக்கண்ணன் மற்றும் சுதாகர் உட்பட‌ எண்கவுண்டரில் ஈடுபட்ட 14 காவல்துறை அதிகாரிகள் மீது 302வது பிரிவின் கீழ் வழக்கு தொடர்பபட வேண்டும்.

4. மேலும் தமிழ் நாடு அரசு விதிகளின் படி எண்கவுண்டர் கொலைகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

5. மேற்குறிப்பிடப்பட்ட விதியின் படி எண்கவுண்டரில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படக்கூடாது.

6. சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் வங்கி கொள்ளையர்கள் எனவும், அவர்கள் அனைவரும் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முறையான விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாக இவ்வாறு கூறுவதால் விசாரணை மேற்கொள்பவர்களின் மனநிலையும் அவ்வாறே மாறிவிடுகிறது. இதுபோல எத்தனையோ வேலைக்காக தென் இந்தியா வந்த வட இந்தியர்கள் இவ்வாறு போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர். எனவே இது போன்ற பிரச்சாரங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

7. வங்கி கொள்ளை தொடர்பாக நடைபெற்ற இந்த எண்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பீஹார் மாநில மக்களை குறித்து தவறாக மக்கள் விளங்கும் அளவிற்கு ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் ஊடகங்களை கண்டிக்க வேண்டும்.

8. இது தொடர்பான விசாரணையை துவங்கியபோது காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்தனர். உரிய பாதுகாப்பினை உண்மை கண்டறியும் குழுவிற்கு அவர்கள் வழங்கவில்லை. சென்ற வருடம் பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் தலித் சமூகத்தவர்களை சுட்டுக்கொன்றனர். அச்சமயம் உண்மை கண்டறியும் குழுவை விசாரிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் நீதிபதி மனித உரிமை அமைப்பாளர்களை விசாரணை செய்வதிலிருந்து தடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை என்று தீர்ப்பளித்தார். எனவே மனித உரிமைகள் பேணப்படவேண்டும். எனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் படி செயல்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்