பாகிஸ்தானில் கடத்தப்பட்ட அமெரிக்கரான வாரன் வெயின்ஸ்டீன் தங்களிடம்
இன்னும் பிணையக் கைதியாக உயிருடன் இருப்பதாக அல்கொய்தா இயக்கத்தின்
தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட பிறகு ஜவாஹிரியிடமிருந்து வீடியோக்கள் வெளியாவது
குறைந்திருந்த நிலையில், இப்போது அவரது புதிய வீடியோவை அல்காய்தா
வெளியிட்டுள்ளது. சில அல்காய்தா இணையத்தளங்களில் இந்த வீடியோ
வெளியாகியுள்ளது.
அதில் பேசியுள்ள ஜவாஹிரி, கடந்த ஆகஸ்ட் மாதம் லாகூரில் வைத்து
கடத்தப்பட்ட வாரன் வெயின்ஸ்டீனை இன்னும் உயிருடன் தான் வைத்துள்ளோம்.
அவரை விடுவிக்க வேண்டுமானால் அமெரிக்க சிறையில் உள்ள ஒமர் அப்துல்
ரஹ்மான், ஆபியா சித்திகி ஆகியோரை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்.
கண் பார்வையற்றவரான ஒமர் அப்துல் ரஹ்மான் நியூயார்க்கைச் சேர்ந்தவர்.
1990ஆம் ஆண்டில் நியூயார்க்கில் தீவிரவாத தாக்குதலுக்கான சதித்
திட்டத்துக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
மூளை நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திகி என்ற பெண் அமெரிக்காவில்
படித்தவர். 2008ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர் நியூயார்க்கில் குண்டுவெடிப்புகள் நடத்துவதற்கான சதித் திட்டம்
தீட்டியிருந்ததாக கைது செய்யப்பட்டு 86 ஆண்டு கால சிறை தண்டனை
விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜவாஹிரி தனது வீடியோவில் இன்னொரு முக்கிய தகவலையும்
தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய
ஆளில்லா உளவு விமான தாக்குதலில் அல்காய்தாவின் முக்கிய தளபதியான அபு
யஹ்யா அல் லிபி கொல்லப்பட்டு விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
லிபியா நாட்டைச் சேர்ந்த அபு யஹ்யா அல் லிபி கடந்த 2005ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்
உள்ள அமெரிக்காவின் அதி பாதுகாப்பு மிக்க சிறையிலிருந்து தப்பியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக