மீண்டும்
கொதிக்கிறது காவிரி. கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் எனக் கர்நாடகாவின்
மைசூர், மண்டியா, பெங்களூரில் வசிக்கும் தமிழர்களிடையே பீதி.
''தமிழர்கள்
அச்சப்படத் தேவை இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். தமிழகத்துக்குத்
தண்ணீர் தர எதிர்ப்பவர்களை அமைதியான வழியில் மட்டுமே போராட அறிவுறுத்தி
இருக்கிறேன். தமிழக அரசுடனும் தமிழர்களுடனும் சகோதரத்துவம், நட்புறவு
பேணுவதே எங்கள் கர்நாடக அரசின் நோக்கம்!'' என்று கேள்விக்கு முன்னரே பேசத்
தொடங்குகிறார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.
''
'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்குவோம்’ என்ற
நீங்களே... மாநிலத்தில் எதிர்ப்பு அலை கிளம்பியதும், 'தமிழகத்துக்குத்
தண்ணீர் விடுவது இல்லை’ என்கிறீர்கள். இதில் எங்கே சகோதரத்துவமும்
நட்புறவும் இருக்கிறது?''
''அதையும்
இதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி 10 ஆயிரம் கன
அடிக்கும் அதிகமாகவே தண்ணீர் திறந்துவிட்டு இருக்கிறோம். இப்போதும் அதே
அளவு நீர் தமிழகத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதே அளவைத்
தொடர்ந்து தமிழகத் துக்கு வழங்க இயலாத சூழல் என்பதைத்தான் தெளிவுபடுத்தி
இருக்கிறேன்.''
''ஆக, இந்தப் பருவத்திலும் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டீர்கள். அப்படித்தானே?''
''கர்நாடகத்தில்
மழை நன்றாகப் பொழிந்த காலகட்டத்தில் தமிழகத்துக்குப் போதுமான நீரை வழங்கி
இருக்கிறோம். இப்போது கர்நாடக அணைகளில் இருக்கும் நீரின் அளவைக்
கருத்தில்கொள்வதோடு, எங்கள் மாநில விவசாயிகள் படும் வேதனையையும் தமிழக
விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். பருவ மழை பொய்த்திருப்பதால், சம்பா,
குறுவை, பொன்னி, கரும்பு சாகுபடி செய்ய வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட
முடியாத எங்கள் விவசாயிகளின்புலம்பல்களுக்கும் கொஞ்சம் காது கொடுங்கள்.
இந்த விஷயத்தைத் தமிழர்கள் தாய் உள்ளத்தோடுதான் அணுக வேண்டும்!''
''கர்நாடகத்துக்குத்
தென் மேற்குப் பருவ மழை பொய்த்ததுபோல, தமிழகத்துக்கும் வட கிழக்குப் பருவ
மழை பொய்க்கும் வாய்ப்பு இருக்கிறதே?''
(நீண்ட
யோசனைக்குப் பிறகு...) ''இதுவரை தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை
பொய்த்தது இல்லை. எங்கள் தரப்பு நியாயத்தையும் பிரச்னைகளையும் எடுத்துச்
சொல்கிறோம். தமிழக முதல்வருக்கும் எங்கள் பிரச்னை புரியும் என
நம்புகிறேன்!''
''கர்நாடகத்தில்
எப்போதும் அரசியல் கட்சிகளிடையே முட்டல் மோதல்தான். ஆனால், காவிரி,
ஒகேனக்கல் பிரச்னை தீவிரமடைந்தால் மட்டும் எப்படி அனைத்துக் கட்சிகளும் ஒரே
நிலைப்பாட்டில் நிற்கிறீர்கள்?''
''வெவ்வேறு
கட்சிகளாக இருந்தாலும் நாங்கள் கர்நாடக மக்களின் நலனில் அக்கறை கொண்டு
இருக்கிறோம் என்பதை உணர்த்தவே நாங்கள் ஒரே குரலாக ஒலிக்கிறோம். இது ஜனநாயக
நடைமுறைதானே. இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது!''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக