அசாம் மாநிலம் கோக்ராஜ்கர், துப்ரி மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கும்,
போடோ பழங்குடி இனமக்களுக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென
மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் மிகப்பெரும் இனக்கலவரமாக வெடித்தது. மக்கள் இருபிரிவாக
பிரிந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். கிராமங்களுக்குள் புகுந்து ஒருவரை
ஒருவர் சரமாரியாக தாக்கினார்கள்.
போடோ பழங்குடி மக்களில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும். இந்த வன்முறை
கட்டுக்கடங்காதபடி மாறியது. 3 நாட்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் 19
பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை நீடிப்பதால் கிராமங்களில் வாழும் மக்கள் கடும் பீதியில்
உள்ளனர். ஏராளமான கிராம மக்கள் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்து
விட்டு அடர்ந்த காடுகளுக்குள் பாதுகாப்பு தேடி சென்று விட்டனர்.
அந்த வகையில் சுமார் 36 ஆயிரம் பேர் வீடுகளை காலி செய்து
வெளியேறியுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 50 ஆயிரம் பேர் வன்முறைகளால்
பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் மீட்கப்பட்டு 35 நிவாரண
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோக்ராஜ்கர், துப்ரி மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
ரெயில் மறியல் நடந்ததால் வாகன போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு
விட்டது. வன்முறை சம்பவங்கள் தொடராமல் இருக்க 2 மாவட்டங்களிலும் 144
ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களும், உள்ளூர் போலீசாரும்
தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டதும்
சுட்டுத்தள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் மற்ற பகுதிகளுக்கு
பரவுவதை தடுப்பதற்காக கூடுதல் ராணுவ படை அசாம் மாநிலத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 18 கம்பெனி ராணுவ வீரர்கள் பதற்றமான
கிராமங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே இரு தரப்பினருக்கும்
சமரசம் செய்ய பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக