அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, ஜூலை 01, 2012

அதிபர் முர்ஸியும் அவர் முன்னால் உள்ள சவால்களும்

எகிப்தின் புதிய அதிபர் மொஹமட் முர்ஸி இன்று சனிக்கிழமை பதவியை பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடிகள், நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கின்ற வறுமை, இன்னும் ஊழல்களாலும் இப்போது அரசியலாலும் பிளவுபட்டு நிற்கின்ற எகிப்தை பொறுப்பேற்றிருக்கின்ற புதிய அதிபர் மொஹமட் முர்ஸிக்கு முன்னால் இருக்கின்ற சவால்கள்தான் ஏராளம்.
 
தேசிய நல்லிணக்கம்
2ம் சுற்றுவரை வந்த அதிபர் தேர்தலில் முர்ஸி மற்றும் முபாரக் காலத்து முன்னாள் பிரதமர் ஷாபிக் இடையில் நடந்த போட்டியும், அதில் முர்ஸி அடைந்த மயிரிழை வெற்றியும் எகிப்தை அரசியல் ரீதியாக இரண்டாக பிளவுபடுத்தியிருக்கிறது. 12 மில்லியனுக்கும் அதிகமான எகிப்தியர்கள் இன்னும் முபாரக்கின் கடைசிப் பிரதமர் ஷாபிக்கைத்தான் ஆதரித்திருக்கிறார்கள்.

இங்குதான் முர்ஸிக்கு முக்கிய சவால் இருக்கிறது. தேசிய இணக்கப்பாடொன்றைக் கொண்டுவர வேண்டிய மிகக் கடினமான வேலை அவருக்கு முன்னால் இருக்கிறது.தனக்கு எதிராக வாக்களித்த தராளவாதக் கொள்கையாளர்களையும் கொப்டிக் கிறிஸ்தவ சமூகத்தையும் முன்னுரிமையுடன் அவர் ஈர்க்க வேண்டியுள்ளது.முஸ்லிம் சகோதரத்துவத்தையும் கடந்துசென்று தான் நாடு முழுமைக்குமான அதிபர் என்பதை மொஹமட் முர்ஸி நிரூபித்தாக வேண்டும்.

உயர் இராணுவ கவுன்சில்
இராணுவத்துடனான உறவுகள் தான் முர்ஸி முன்னால் உள்ள அடுத்த பெரிய சவால்.ஆயுதப் படைகளின் உயர் கவுன்சிலுடன் எப்படி உறவைக் கொண்டு நடத்துவது என்பது முர்ஸிக்கு பெரிய தலையிடியாக இருக்கும்.இரண்டாம் சுற்று வாக்கெடுப்புத் தொடங்கும்போதே, உயர் இராணுவக் கவுன்சில், அதிபருக்கான அதிகாரங்களைக் குறைத்து புதிய அரசியலமைப்பு விதிகளை அறிவித்தது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து அதற்குரிய சட்டவாக்க அதிகாரங்களைக் கூட தற்காலிகமாக இராணுவக் கவுன்சில் தனதாக்கிக்கொண்டது.
இராணுவத்துக்கான பட்ஜெட், தளபதிகள் நியமனம், அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பது என்று இராணுவ விவகாரங்களையெல்லாம் இராணுவக் கவுன்சில் பாதுகாப்பாக தானே எடுத்துக்கொண்டுவிட்டது.இப்படியாக எகிப்து இராணுவம் புதிய அதிபரை தனது கிடுக்குப்பிடிக்குள் வைத்திருக்கப் பார்க்கிறது.

பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம்
அடுத்தபடியாக, முர்ஸி தன் முன்னால் உள்ள பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என்று இரண்டு பெரிய விவகாரங்களைக் கையாள வேண்டியருக்கிறது.கடந்த ஆண்டு உருவான புரட்சிக்குப் பின்னால் எகிப்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துவிட்டது.கொலைகள், கடத்தல்கள், கார் திருட்டுக்கள், ஆயுத பாவனை என அங்கு அட்டூழியங்களுக்கு பஞ்சமில்லாத நிலைதான் தொடர்கிறது.இதேபோல, எகிப்தில் 40 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழேதான் வாழ்கிறார்கள். புரட்சி வெடித்த காலத்திலிருந்தே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதுவும் முர்ஸின் ஆட்சிக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

எகிப்தில் முதலீடுகள் மீளப்பெறப்பட்டுள்ளன, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பலதுறைகளிலும் தொழிற்சங்கப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன.எகிப்தின் வெளிநாட்டு பணக் கையிருப்புகளும் அரைவாசியாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

வளைகுடா ஒத்துழைப்பு
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அதிபர் ஆவதை வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் விரும்பவில்லை, அதனால் எகிப்துடனான வளைகுடா உறவுகள் பாதிக்கப்படலாம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டுவந்தது.வளைகுடாவில் ஆளும் மேல்தட்டு வர்க்கங்களுக்கு எதிராக எகிப்தில் இருந்துகொண்டு முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் கிளர்ச்சிகளை கிளறிவிடுவதாக கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
முர்ஸிக்கு முன்னால் உள்ள இன்னொரு சவால் என்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விவகாரம்.முர்ஸி இந்த நாடுகளுடனான உறவை எப்படி வைத்துக்கொள்வார் என்பதுதான் பலராலும் கூர்ந்து எதிர்பார்க்கப்படுகிற விடயம்.ஒரு யதார்த்தவாதி என்ற ரீதியில், அவர் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை மதிப்பார் என்றும், அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் நல்ல உறவை வைத்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்து கைச்சாத்திட்டிருக்கின்ற எல்லா சர்வதேச ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் கடைப்பிடிப்பதாக அவர் வெற்றிச் செய்தி மேடையில் முழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இங்கு அவருக்கு சவால் என்பது, நாட்டில் இருக்கின்ற மற்ற எகிப்தியர்களை, குறிப்பாக தனது கட்சி ஆட்களையே இந்தவிடயத்தில் சமாளிப்பது எப்படி என்பதுதான்.ஏற்கனவே ஹொஸ்னி முபாரக் அமெரிக்காவின் கூட்டாளி என்றுதான் முஸ்லிம் சகோதரத்துவம் அவரை எதிர்த்தது.இந்த விடயத்தில் சொந்த நாட்டுக்குள் முர்ஸிக்கு மவுசு இல்லாமல் போய்விடுமோ என்றும் பார்க்கப்படுகிறது.

இரான் விவகாரம்
இரானுடன் உறவு வைத்திருப்பது என்ற விடயத்தில் முன்னைய எகிப்து அரசாங்கங்கள் சற்று தள்ளித்தான் இருந்து வந்திருக்கின்றன. இங்கு முர்ஸி எப்படி நடந்துகொள்வார் என்பது தான் கேள்வி.அரபுலகில் ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக அண்மைக்காலங்களாக அச்சம் வெளிப்படுத்தப்பட்டுவருகிறது. இது எகிப்துக்குள்ளும் ஊடுருவ முனைகிறது என்றும் கூறப்பட்டது.

எகிப்தில் கொஞ்சப்பேர் இதனை எதிர்த்தாலும் இந்த விடயத்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் இரானை வரவேற்கும் விதத்தில்தான் நடந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இரானுடனான உறவுகள் விடயத்தில் உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிலும் முர்ஸிக்கும் கடும் அழுத்தங்கள் வரலாம்.ஆக மொத்தத்தில் பல கோணங்களிலிருந்தும் வரும் சவால்களையும் தாண்டி எகிப்தை கொண்டு நடத்தவேண்டிய சவால்தான் புதிய அதிபர் முர்ஸி முன்னால் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்