அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஜூலை 23, 2012

அம்பாசிடர் காரில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள பென்சுக்கு மாறுகிறார் பிரணாப்

புதுடெல்லி: அமைச்சராக அம்பாசிடர் காரில் பயணம் செய்து வந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாவதை முன்னிட்டு இனி ஏகப்பட்ட பாதுகாப்புகளைக் கொண்ட மெர்சிடஸ் பென்ஸ் காரில் செல்ல இருக்கிறார். 

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி, கடந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எப்போதுமே மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படும் அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வந்தார்.

வழக்கமாக ஜனாதிபதி சொகுசு மிக்க நவீன வசதிகளுடன் கூடிய கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் செல்வது வழக்கம். அதன்படி, ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் பிரணாபும் ஜெர்மனியில் தயாரான மெர்சிடஸ் பென்சில் இனி செல்ல இருக்கிறார்.இந்த சொகுசு காரில் பல்வேறு வசதிகள் உள்ளன.

ஜனாதிபதி அமரும் இடம் டிரைவர் இருக்கையில் இருந்து தனியே பிரிக்கப்பட்டுள்ளது. காரில் ஜனாதிபதி ஏறிய உடன், ஹைட்ராலிக் கதவுகள் தானே மூடிக் கொள்ளும்.

ஜனாதிபதி செல்லும் கார் என்பதால் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏகே ரக துப்பாக்கி குண்டுகளாலோ, வெடிகுண்டு தாக்குதலாலோ காருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது மட்டுமல்ல, ஏவுகணையால் கூட தகர்க்க முடியாத அளவுக்கு கார் உறுதி மிக்கது. கார் செல்லும் இடத்தை கண்டறியும் வகையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்களுடன் காரிலேயே ஜனாதிபதி ஆலோசனைகள் நடத்துவதற்கு வசதியாக இரண்டு வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. டயர்களில் காற்றே இல்லாவிட்டாலும் கூட மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் 30 கி.மீ. தூரம் செல்லும் வகையில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார் ஜன்னலை திறக்காமலே வெளியே காரை சுற்றி நிற்கும் மக்களிடம் பேசும் வகையில் உள்ளேயும் வெளியேயும் மைக்ரோபோன் வசதி செய்யப்பட்டுள்ளது. காரின் பின்புறத்தில் சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக அந்த இடத்தில் இருந்து மிக வேகமாக சென்று விட வசதியாக சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. காரை ஸ்டார்ட் செய்த 6 முதல் 7 விநாடிகளிலேயே மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கார் மின்னலாய் விரைந்து செல்லும். இவ்வளவு நவீன வசதிகள் கொண்ட, பிரணாப் முகர்ஜி பயணம் செய்யப்போகும் இந்த காரின் விலை ரூ.12 கோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்