மங்களூர்: மங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஆதரித்தும், கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்து நகரில் துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது.
அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்து மத வெறி பிடித்த ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதில் முக்கியமாக "உங்களால் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்யமுடியாது!" என்ற கோஷம் அந்த இடத்தையே அதிரச்செய்வதாக இருந்தது.
உங்களால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அழிக்க முடியாது. ஏனென்றால் என்றோ பாப்புலர் ப்ரண்டும் சரி, அதனுடைய சமூகப்பணிகளும் சரி கர்நாடக மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டது, மக்களின் இதயங்களை உடைக்க உங்களால் முடியாது. இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் அப்துல் வாஹித் கூறினார்.
தனது உரையின் தொடக்கத்தில் ஹுன்சூர் மாவட்டத்தில் நடந்த மாணவனின் கொலையை வன்மையாக கண்டித்தார். இதை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்கக்கூடாது என்று கூறினார். ஒவ்வொரு தனி நபரும் இத்தைகைய செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால், ஆளும் பா.ஜ.க அரசாங்கமோ இந்த கொலையை கே.எஃப்.டி யோடு தொடர்பு படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. கே.எஃப்.டி (கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு இணைந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்த போதும் பா.ஜ.க அரசாங்கம் கே.எஃப்.டியை தடை செய்யவேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றது.
பா.ஜ.க அரசின் இந்த ஒப்பாரி இன்றைக்கு நேற்றல்ல, மாறாக கடந்த 2009 ஆம் ஆண்டு மைசூரில் ஏற்பட்ட கலவரத்தின் போதும் இதையே செய்தது. சங்கப்பரிவார தீவிரவாதிகள் மைசூரில் உள்ள பள்ளி வாசலில் பன்றியின் தலையை வெட்டி போட்டது. ஆனால் இதை செய்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தான் என்று பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியது. அத்தோடு மட்டுமல்லாமல் சில அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. இதனை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "சிறைச்செல்வோம்" போராட்டத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடிய அந்த கூட்டத்தில் தடியடி நடத்தி அராஜக செயலில் ஈடுபட்டது. பின்னர் இதன் விசாரணை உயர் நீதி மன்றத்திற்குச் சென்றது. அங்கே கர்நாடகா அரசுக்கு எதிராக ரூபாய் 50,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பா.ஜ.க அரசு தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. காரணம் அவர்கள் செய்யாத பல நல்ல காரியங்களை நாம் செய்து வருகிறோம். நாம் மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கேட்டறிந்து அவர்களுக்கு தீர்வையும் ஏற்படுத்திக்கொடுக்கின்றோம். நமது பணிகள் ஒன்றும் மறைத்து செயல்படக்கூடியதல்ல. மாறாக மக்கள் மத்தியில் வெளிப்படையாக செய்யக்கூடியதேயாகும் என்று அப்துல் வாஹித் கூறினார்
சமூக ஆர்வலர் ஜி. இராஜசேகர் அவர்கள் கூறும் போது பாப்புலர் ஃப்ரண்டை ஹுன்சூர் கொலை வழக்கோடு தொடர்பு படுத்துவது அந்த இயக்கத்தின் மீதான சதியாக மட்டும் நான் பார்க்கவில்லை. மாறாக அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதான சதியாகவே எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் பா.ஜ.கவினர் ஒருபோதும் முஸ்லிம்களின் வளர்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
பா.ஜ.க அரசாங்கம் தலித்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கெதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
ஒருவன் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். நீதிமன்றத்தின் முடிவுக்கு முன்னால் யாரையும் அவரது குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றவாளி என்று கூறுவதற்கு அதிகாரம் இல்லை. ஆனால் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் கே.எல். அஷோக் குற்றம் நடந்த உடனேயே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கினார். இதிலிருந்து பா.ஜ.க அரசின் முஸ்லிம் விரோத போக்கையும் அவர்கள் செய்யும் சதியையும் நாம் அறிந்து கொள்ளலாம் என ஜி.இராஜசேகர் கூறினார்.
மங்களூர் பல்கழைகழகத்தின் பேராசிரியர் பட்டாபிராம சோமயாஜி அவர்கள் கூறும்போது, நமது நாட்டில் தடைசெய்யப்படவேண்டிய இயக்கம் என்று ஒன்று இருந்தால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான். பா.ஜ.க அரசு மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உடனே தடை செய்யவேண்டும், காரணம் அதனுடைய உறுப்பினர்கள் இன்று நமது நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நந்திக், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் இவர்கள் ஈடுபட்டது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் அவர் கூறும்போது ஆர்.எஸ்.எஸ்-ன் உறுப்பினர் தான் நமது தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொன்றான் என்றும், சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும் அவர் கூறியதாவது, இன்று பா.ஜ.க தலைவர்களின் ஊழல் ரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே பா.ஜ.க இதை போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறது. இன்று முதலமைச்சர் எடியூரப்பா மற்றம் அவரது அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதும் இதனால் நாட்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் உடுப்பி மாவட்ட தலைவர் பேராயர் வில்லியம் மார்டிஸ் அவர்கள் உரையாற்றும் போது " நான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு இருக்கின்றேன் காரணம் பாப்புலர் ஃப்ரண்ட் மக்கள் சேவையில் ஈடுபடுபவர்கள். அநீதிக்கு எதிராக போராடுவதால் பா.ஜ.க அரசு இவ்வமைப்பை தடை செய்ய முயற்சிக்கிறது. நான் இன்று உடல் நிலை சரியில்லாதிருக்கிறேன். இருந்த போதும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்று தான் வந்தேன். நீதிக்காக போராடுவதில் என் உயிரையும் கூட தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன்." என்று அவர் உணர்சியுடம் பேசினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரியாஸ், எஸ்.டி.பி.ஐயின் உடுப்பி மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா, டக்ஷின் கன்னட மாவட்டத்தின் பொதுச்செயலாளர் அக்பர் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மங்களூர் மாவட்ட தலைவர் முஹம்மது ஷரீஃப் வரவேற்புரை ஆற்றினார். சகோதரர் நஜீர் தும்பே நன்றியுரை தெரிவித்தார்.
மேலும் புகைப்படங்கள்