அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஜூலை 06, 2011

துனீஷியா : அரபுலகை அசைத்த மக்கள் புரட்சி!

                              
                     துனீஷியா ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள நாடு. 99% அரபு மொழி பேசும் முஸ்லிம்களை கொண்ட இந்நாடு 1 1/2 கோடி மக்கள் தொகையை கொண்டது. 1300 கி.மீ கடற்கரையை கொண்ட நீண்ட பாரம்பரிய செழுமை கொண்டது.

                    கி.பி 6ம் நூற்றாண்டில் பைசாந்தியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்ட இம்மண்ணில் 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் நுழைந்தனர். இஸ்லாத்தை இருகரம் ஏற்று அரவணைத்த இம்மக்கள் அரபு மொழியையும் தமதாக்கி கொண்டனர். பின்னர் பல்வேறு ஏகாதிபத்திய கிறிஸ்துவ நாடுகள் துனீஷியா மீது படையெடுத்தன. இறுதியாக 1574ல் துருக்கி உதுமானிய பேரரசின் மன்னள் இரண்டாம் சலீம் லாகொலேட்டா, துனீஷ் ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் போரில் வெற்றி பெற்று துனீஷியாவை கைப்பற்றினார். உதுமானிய இஸ்லாமிய பேரரசின் ஓர் மாகாணமாக துனீஷியா இருந்து வந்தது.

                     இந்நிலையில் ஏகாதிபத்திய வல்லூறுகள் துனீஷியாவை வட்டமிடத் தொடங்கின. இந்தியா வை பிரான்சு, போர்சுகல், ஆகியவை கைப்பற்ற முயற்சித்து இறுதியாக இங்கிலாந்து வெற்றி கண்டதோ அதே போல் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகியவை துனீஷியாவை, கவர முயற்சித்தன. இறுதியில் பிரான்ஸ் தனது குடியேற்ற நாடுகளில் ஒன்றாக துனீஷியாவை ஆக்கிக் கொண்டது.

                துனீஷியாவின் இயற்கை வளங்களை பிரான்சு சுரண்டியது. இங்கிலாந்து இந்தியாவில் அமைத்தது போன்று பிரான்சும் ரயில்வே, மற்றும் நெடுஞ்சாலைகளை அமைத்து துனீஷியாவின் உள் கட்டமைப்பை சீரமைத்தது. எளிதில் கொள்யைடிக்க வசதியாக 1881 முதல் பிரான்ஸ் துனீஷியாவை தன் வசம் வைத்துக் கொண்டிருந்தது. துனீஷியாவைப் போல் அதன் அண்டை நாடான அல்ஜீரியாவும் பிரான்சுக்கு அடிமைப்பட்டு கிடந்தது. இன்னொரு அண்டை நாடான லிபியா இத்தாலியின் பிடியில் இருந்தது.

                 இப்படி உதுமானிய இஸ்லாமிய கிலாபத் தின் பகுதிகளை ஏகாதிபத்திய கிறிஸ்துவ வல்லரசுகள் முழுங்கிக் கொண்டிருந்தன. கிலாபத்தின் தலைமைப் பீடமான துருக்கியோ ஆட்டம் கண்டுக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் சூழச்சியால் அரபுகள் துருக்கி கிலாபத்தை எதிர்த்து போர் புரிந்தனர். இறுதியில் 1927ல் துருக்கியில் இருந்து வந்த இஸ்லாமிய வல்லரசு தகர்ந்தது-. ஆங்கிலேயர்களுக்கு உதவி புரிந்த சவூதி மன்னர் சவூத், ஹுஸைன் போன்றவர்கள் தங்கள் விசுவாசத்திற்கு சில நாடுகளை பரிசாக பெற்றனர். இந்தியாவில் ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாபை இவர்களுக்கு ஒப்பிடலாம். ஆனால் இங்கு திப்பு சுல்தான் எழுச்சி பெற்றதை போன்று லிபியாவில் உமர் முக்தார் போன்ற வீரர்கள் உருவானதையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

                 பிரான்சில் உருவான பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தினாலும் ஐரோப்பியர்களின் உயர் கல்வியை கற்றுதேர்ந்ததினாலும் துனீஷிய மாணவர் கள் தங்கள் நாடு அடிமைத் தலையில் இருந்து விடுபட முயற்சிகள் மேற்கொண்டனர். 1920ல் ‘தஸ்தூர் கட்சி’ உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சி மேல் நாட்டு கல்வி பயின்ற இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. துனீஷியாவிற்கென அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். பிரெஞ்சு மக்களுக்கு இணையான உரிமைகள் துனீஷிய குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என இக்கட்சி போராடியது, எனினும் இக்கட்சி பிளவுண்டது.

                   1934ல் ஹபீப் போர்ஜிபா புதிய தஸ்தூர் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை உருவாக்கினார். இக்கட்சியை பிரெஞ்சு அரசு தடை செய்தது. போர்ஜிபா சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் தஸ்தூர் கட்சி நம் நாட்டின் காங்கிரஸ் போன்று மக்கள் செல்வாக்கை கொண்டிருந்தது.

               தேசியவாதிகள் இவ்வாறு ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க இஸ்லாமிய அடிப்படையில் துனீஷிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து ஒரு குழு போராடிக் கொண்டிருந்தது-. கேடு கெட்ட பிரெஞ்சு கலாச்சாரத்தை எதிர்த்தும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவும் இவர்கள் போராடி வந்தனர். அல் இத்திஹாதுல் முஸ்லிமீன் (1911), இஹ்வான் அல் முஸ்லிமீன் கட்சிகளின் தாக்கத்தினாலும் பிரபல இஸ்லாமிய சீர்திருத்தவாதி முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தாக்கத்தினாலும் இஸ்லாமிய கொள்கைவாதிகள் போராட்டங்களை தொடர்ந்து வந்தனர்.

               இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளால் 1957ம் ஆண்டு பிரெஞ்சு அரசு துனீஷியாவிலிருந்து வெளியேறியது. ஹபீப் போரிஜிபா பிரதமரானார். நாட்டில் இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டன. துருக்கியின் கமால் அத்தாதுர்கைப்போல் இஸ்லாத்தை துடைத்தெறியும் செயல்களில் ஈடுப்பட் டார் போர்ஜிபா.

                   பர்தா அணிவது தடுக்கப்பட்டது, முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது தடை செய்யப்பட்டது. பிரெஞ்சு சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இஸ்லாமிய ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.

                  எனினும் கொள்கைவாதிகள் அடங்கி விடவில்லை. ஹிஜ்புன்னஹ்தா  ‘மறுமலர்ச்சி’ என்ற பெயரில் ரஷித் கன்னோசி தலைமையில் இஸ்லாமியவாதிகள் திரண்டனர். எனினும் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். 1987ல் உடல் நலம் குன்றிய போர்ஜிபாவை அரசியல் சதி மூலம் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விட்டு நாட்டின் புதிய அறிபரானார் ஜைனுல் ஆபிதீன் இப்னு அலி.

              பதவியேற்றவுடன் சிறையிலிருந்த ரஷீத் கன்னோசி உட்பட கொள்கைவாதிகளை விடுதலை செய்தார். எல்லாம் மாறுவது போல் தெரிந்தது. 1989ல் பொது தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்கட்சிகளும் தேர்தலில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. தேர்தலில் பென்அலி வெற்றி பெற்றார். எனினும் வெற்றி சாதாரணமாக கிட்டி விடவில்லை அவருக்கு. நம்நாட்டின் ஆளும் கட்சிகளைப் போல் சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தித்தான் அவரால் வெல்ல முடிந்தது.

               ‘ஹிஜ்புன் னஹ்தா’ கட்சியோ மொத்த வாக்குகளில் 17% பெற்று நாட்டின் இரண்டாவது கட்சியாக உருவாகியிருந்தது. அக்கட்சியின் உண்மையான வாக்கு சதவிகிதம் மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியவாதிகளின் இந்த எழுச்சியை இப்னு அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

                      நாட்டில் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டன. நஹ்தா கட்சி தடை செய்யப்பட்டது. கட்சித் தலைவர் ரஹீத் கன்னோசி நாட்டை விட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இவ்வாறாக நாட்டை அடிமைப்படுத்தி சர்வாதிகாரியான இப்னு அலி தனது முன்னோடி போரிஜிபாவுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை.

             இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து கலாச்சாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன. நாட்டில் கிளப்புகளும், மதுபான விடுதிகளும், விபச்சார விடுதிகளும் பெருகின. முக்காடு போடுவதை தடை செய்து சட்டமே இயற்றப்பட்டது. மேலைநாட்டு நாகரீகத்தில் மக்கள் ஊறிக் திளைத்தனர்.

                 கலாச்சாரத்தை மட்டுமல்ல பொருளாதார திட்டங்களும் மேலை நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது பணக்காரர்களுக்கே சாதகமாக இருந்தது. நம் நாட்டின் அம்பானிகளும், டாட்டாக்களும் அனுபவிப்பதை போல நாட்டில் ஒரு சிலர் செல்வத்தில் திளைத்திருக்க பெரும்பான்மை மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தனர்.

                  இளைஞர் பட்டாளம் வேலையின்றி வீதியில் திரிந்து கொண்டிருந்தது. மக்கள் விலையேற்றத்தால் தவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதிபரும் அவரது குடும்பத்தினரும் செல்வ வனப்பின் உச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். அதிபரின் மனைவி லைலா தனி போயிங் விமானத்தில் இத்தாலி, ரோம் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பேஷன் ஷோக்களுக்கு பறந்துக் கொண்டிருந்தார். அதிபரின் மச்சானோ அரசு ஒப்பந்தங்களை வளைத்து போட்டுக் கொண்டிருந்தார். கையூட்டை பெற்றுக் கொண்டு மிகப்பெரிய திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்களோ கொதி நிலையில் இருந்தனர்.

                    எந்நேரமும் அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை நெருப்பு எரியத் துவங்கி விட்டது. எண்ணெயை ஊற்றத்தான் ஆளில்லை. இந்த சூழ்நிலையில் தான் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றும் ஒரு சம்பவம் நடந்தது.

                  வழக்கம்போல் தனது தள்ளுவண்டி காய்கறி கடையை ரோட்டில் தள்ளிக்கொண்டு வியாபாரத்துக்கு சென்றுக் கொண்டிருந்தான் முஹம்மது பூஅஜீஜ். அப்போது வழிமறித்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் கையூட்டு கேட்க, இல்லையென்று முஹம்மது மறுக்க தள்ளுவண்டியில் இருந்த எடை கற்களை கொண்டு செல்கிறார் காவலர். இதனால் வெறுத்துப் போன முஹம்மது காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார். பலனில்லாமல் போகவே நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட செல்கிறார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த பூஅஜீஜ். மண்ணெண்ணையை ஊற்றிக் தீக்குளிக்கிறார்.

                  நட்ட நடு வீதியில் சிதிபூஜிட் எனும் நகரின் மத்தியில் நடைபெற்ற இச்சம்பவம் துனீஷியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. டிசம்பர்,17ம் தேதி தீக்குளித்த பூஅஜீஜ் ஜனவரி 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார். ஆனால் அதற்குள் துனீஷியாவில் பெரும் பூகம்பமே ஏற்பட்டுவிட்டது. நாடெங்கும் மக்கள் திரள் போராட்டங்கள் வெடித்தன. அரசு இயந்திரம் செயலிழந்தது. இராணுவம், காவல்துறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் அதிபர் ஜைனுல் ஆபிதீனுக்கு எதிராக கொந்தளிக்க ஜனவரி 17ல் நாட்டை விட்டே ஓடிப்போனார் ஜைனுல் ஆபிதீன் இப்னுஅலி.

                  கத்தியின்றி, இரத்தமின்றி துனீஷியாவில் நடந்த இம்மக்கள் புரட்சி அரபு வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே தனி இடத்தை பிடித்துவிட்டது. அரபுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது. அரபுலகின் அனைத்து சீர்திருத்த அமைப்புகளும், இஸ்லாமிய பின்னணி கொண்ட அமைப்புகளும் துனீஷிய மக்களின் புரட்சியை வரவேற்றன.

               ‘சர்வாதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர்’ என்றது எகிப்து நாட்டின் முன்னணி அமைப்பான இஹ்வான் அல் முஸ்லிமீன்.

                   மக்களின் புரட்சியை மேலை நாடுகள் பயன்படுத்தி விட துனீஷிய மக்கள் விட்டு விடக்கூடாது என்றார்.

                  ஈரான் அதிபர் அஹமத் நிஜாத். மீண்டும் அதிபரின் பழைய தோழர்களே ஆட்சியை பிடித்து விடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தலை நடத்திவிட்டு பதவி விலகி விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார் பிரதமர் முஹம்மது கன்னோஷி.

                  இந்நிலையில் தஞ்சம் புகுந்த ‘ஹிஜ்ப் அந்நஹ்தா’ கட்சித் தலைவர் ரஷீத் கன்னோஷி நாட்டிற்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் துனீஷியா இஸ்லாமிய குடியரசாக மலர வாய்ப்புள்ளது. லண்டனில் முக்கியமான முஸ்லிம் அறிவு ஜீவியாக ரஷீத் கன்னோஷி கருதப்படுவதால் இவருக்கு மேலை நாடுகளும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காது என நம்பப்படுகிறது.

                   கிலாபத் எனும் இஸ்லாமிய ஆட்சியை இலட்சியமாக கொண்ட ஹிஜ்புத் தஹ்ரீர் எனும் அமைப்பும் பேரணிகள், ஜும்ஆ உரைகள் மூலமாக இஸ்லாமிய அரசே அமைய வேண்டும் என துனீஷியாவில் பிரச்சாரம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

                 மேலை நாட்டு பொம்மைகளான சர்வாதிகாரிகளால் முழுக்க முஸ்லிம் மக்களை கொண்ட தேசங்கள் இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத கொள்கைகளை கொண்டு ஆட்சி செய்யும் அவலம் இனியும் தொடராது என்பதையே துனீஷியாவைத் தொடர்ந்து எகிப்து, அல்ஜீரியா, ஏமன் என தொடரும் மக்கள் புரட்சி சொல்கிறது.

                    அனைவருக்கும் சம நீதி, ஏற்றத்தாழ்வற்ற சமூக நிலை, சுரண்டலற்ற பொருளாதார உரிமை வழங்கும் இஸ்லாத்தை பின்பற்றி அரசியல் கொள்கையாக ஏற்காதவரை அரபு நாடுகளில் கிளர்ச்சிகளுக்கும், புரட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்