அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஜூலை 21, 2011

முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆலோசனை

E. M. அப்துர்ரஹ்மான்
பெங்களூர் : முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்னையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு:


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சம்பந்தமான ஆலோசனைகள் முடிவுக்கு வந்துவிட்டன. அனைத்து அமைச்சகம், அரசு நிறுவனத்தின் இறுதி ஆலோசனையைக் கேட்ட பின்பு உள்துறை அமைச்சகம் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்ததை கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.


பாப்புலர் பிரன்ட்-ன் முழக்கங்களும், ஆலோசனைகளும் இந்திய நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதை உள்ளடக்கியதாகும். அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளின் இட ஒதுக்கீட்டையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

  1. எல்லா மாநிலங்களிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்ப்பினர் (SEBC) என்றோ, ஒட்டுமொத்தமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) என்றோ அறிவிக்க வேண்டும்.
  2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைப்படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர மத சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
  3. பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர்களை விட முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  4. அரசியல் சாசன பிரிவு 341, 1950 சட்டத் திருத்தத்தின்படி தலித்துகளுக்கு இணையான தொழில் புரியும் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பட்டியல் வகுப்பினரின் மொத்த இட ஒதுக்கீட்டை விகிதாசாரத்திற்கு ஏற்றார்போல மேம்படுத்த வேண்டும்.
  5. இதர  பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பட்டியலிலிருந்து பிரித்து முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும். 27% உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டால் முஸ்லிம்களின் விகிதத்திற்கு ஏற்றாற்போல் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
  6. அதிகரிக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் (OBC QUOTA-வில்) முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டால் கேரளாவிலும், கர்நாடகாவிலும் பின்பற்றப்படுவதைப் போல உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ரோஷ்டர் சுழற்சி அடிப்படையில் சேர்க்கையும், பணி நியமனமும் அமைய வேண்டும்.
  7. இட ஒதுக்கீட்டில் உச்ச நீதி மன்றத்தின் 50% உச்சவரம்பை தமிழகத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டைப்போல் சட்டத் திருத்தங்கள் மூலம் சரி செய்யலாம். ஏற்கெனவே இருக்கக் கூடிய 49.5 சதவீத இட ஒதுக்கீட்டில் (SC/ST 22.5%, OBC 27%) புதிய 10% முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இணைக்க இது அவசியம்.  
27% இருக்கும் OBC பட்டியலை அதிகரிக்காமல் தற்போது OBC பட்டியலில் இல்லாத முஸ்லிம்களை அந்த பட்டியலில் இணைக்க முயற்சி செய்தால் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். இது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு உகந்த சூழலை ஏற்படுத்தாது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் SC/ST பிரிவிலும் அவர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் முஸ்லிம் என்ற புதிய பிரிவை இணைத்தாலும் இதே பிரச்னை தான் ஏற்படும்.


எனவே இட ஒதுக்கீட்டிற்கான அடுத்தகட்டப் போராட்டத்தை, இப்பிரச்னையில் ஆர்வமுள்ள பிற சமுதாய, சமூக இயக்கங்களுடன் இணைந்து நடத்தப் போவதென சமீபத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்