அசாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல்
இனக்கலவரமாக மாறி மாநிலத்தின் அமைதியை சீர்குலைத்தது. இந்த கலவரத்தால் 56
பேர் உயிரிழந்தனர். பல லட்சம் முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து அரசின் நிவாரண
முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரத்தை ஒடுக்க மாநில போலீசாருடன்,
ராணுவமும் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் கடந்த பத்து
நாட்களாக அசாமில் அமைதி நிலவிவந்தது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் சிரங்
மற்றும் கோக்ரஜார் மாவட்டங்களிலுள்ள நிவாரண முகாம்களில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீது இன்று திடீரென நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிக்கி 5 பேர்
பலியாயினர். இதனால் அசாம் கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக
உயர்ந்துள்ளது.
சிரங் மாவட்டத்தில்
முகாமிலிருந்து வெளியேறிய தந்தை மற்றும் இரண்டு மகன்களின் உடல்கள் இறந்த
நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
சஞ்சீவ் கிருஷ்ணா கூறியுள்ளார். பலியான மூவரும் எந்த பாதுகாப்பும் இன்றி,
யாரிடமும் தெரிவிக்காமல் முகாமை விட்டு வெளியேறியதாகவும் அவர்
தெரிவித்தார். பலியான மூவரின் சாவுக்கு நியாயம் கேட்டு சிரங்
மாவட்டத்தில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்
அம்மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
இதேபோல் கோக்ரஜார் மாவட்டத்திலும்
இரண்டு உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவர்
காணாமல் போயுள்ளார். ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர்
பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு உடனடியாக விரைந்து சென்று பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு
உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக