அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

திணறும் இந்தியப் பொருளாதாரம்

2012 – ன் இறுதிக் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3% என்று குறைந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 49 ரூபாயிலிருந்து 56 ரூபாயாக அதிகரித்துவிட்டது. ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் என்ற நிறுவனம், இந்தியாவின் தர வரிசையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்திர தொழில் வளர்ச்சிக் குறியீட்டு எண்ணான ஐ.ஐ.பி, ஏப்ரல் மாதத்தில் வெறும் 0.1% மட்டுமே வளர்ந்திருக்கிறது. என்னதான் நடக்கிறது இந்தியாவில்?

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூன்றாண்டு காலக் கையாலாகாத்தனமும், திட்டங்களை நிறைவேற்றுவதில் இருக்கும் சுணக்கங்களும், முக்கியமாக முடிவுகள் எடுப்பதில் இருக்கும் திணறல்களும்தான் இந்நிலைக்கு காரணம். ஒரு கூட்டணி ஆட்சியில் பயமுறுத்தல்களும் நெருக்கடிகளும் சகஜம்தான். ஆனால், ஐ.மு.கூ-2 ஆட்சியின்போது தவறான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படவேண்டிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதும் சகஜமாக உள்ளது.

தான் நிதியமைச்சராக இருந்தபோது, ஒரு பொருளாதார நிபுணராக இந்தியாவின் திசையை மாற்றிய பெருமை மன்மோகன் சிங்குக்கு உண்டு. ஆனால், ஐ.மு.கூ-2 ஆட்சியின்போது, இந்தியாவின் வளர்ச்சியைக் குழி தோண்டிப் புதைத்தவர் என்றுதான் வரலாறு மன்மோகன் சிங்கைப் பற்றிப் பேசும்.

அடுத்த ஆண்டில், நம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்திட்ட 4% என்று உயர்ந்து விடும். வருடத்துக்கு நாலரை லட்சம் கோடி ரூபாய் அல்லது சுமார் 80 பில்லியன் டாலர். இந்தப் பற்றாக்குறையை பிற வரவுகளின் மூலமாகச் சமாளிக்கலாம் என்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால் இது எளிதல்ல. கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டாலருக்குக்கீழ் இறங்காது என்கிறது. எனவே நம் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு குறையப்போவதில்லை. அதிலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வேறு பலவீனம் அடைந்துகொண்டிருக்கிறது.

8% வருடாந்திர வளர்ச்சி என்று மார் தட்டிய காலம் போய் இன்றைக்கு 6% வளர்ச்சியை எட்டுவோமா என்கிற சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது. இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது இன்னமும் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. சாலைகள், மின்சாரம், சுகாதாரம், நீர் போன்றவற்றைச் சீரமைக்காமல் நாட்டில் வளர்ச்சி வரும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது. மார்ச் 2012 முடிய, கிட்டத்திட்ட ஏழரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் அரசின் மெத்தனத்தால் முன்னேற்றம் இன்றி இருக்கின்றன என்று சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் ஏப்ரல் ஆய்வறிக்கை சொல்கிறது.
இதில் முக்கால்வாசிப் பணிகள், தனியார் சார்ந்தது. இந்நிலையில் தனியார் முதலீட்டாளர்கள் இந்தியாவில் மேற்கொண்டு முதலீடு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ?

மெக்கின்சி நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட இருபத்தெட்டு கோடி இளைஞர்கள் வேலைக்கான தேர்ச்சியோ, திறனோ இல்லாமல் இருக்கிறார்களாம். இது மிக ஆபத்தானது. வேலைவாய்ப்பின்மை என்பது ஒருபுறம் இருக்க, நாளை இந்த இளைஞர்கள் பணத்துக்காக எவ்விதமான தீய காரியங்களிலும் இறங்கக்கூடும் என்பது மேலும் கவலையளிக்கக்கூடியது.

தாராளமயமாக்கலுக்குப் பின்னர், இந்தியாவில் தனியார் கல்லூரிகள் பொறியியல், மருத்துவம், உணவு, மேலாண்மை போன்ற சில துறைகளில் மட்டுமே வந்திருக்கிறார்கள். பத்தாவது தேர்ச்சி பெறாத ஓர் இளைஞருக்கான வேலை வாய்ப்புகள் குறைவு; வருமானமும் குறைவு. அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவும் நிறுவனங்களும் குறைவு. சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களுக்காக இந்தப் பிரச்னைக்கான தீர்வை உடனடியாகக் கண்டுபிடிப்பது அவசியம். இதைக் கவனிக்காமல் போனால், பின்னாள்களில் இது இந்திய இறையாண்மைக்கேகூட அச்சுறுத்தலை விளைவிக்கலாம்.

ஏப்ரல் 2012-ல், ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் ரேட்டிங் நிறுவனம், இந்தியாவை ‘நிலையானது’ (stable) என்பதிலிருந்து ‘எதிர்மறை’ (negative BBB-) என்னும் நிலைக்கு மாற்றியது. ப்ரிக்ஸ் என்றழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா கூட்டமைப்பில் மிகக் கீழான நிலையில் இருக்கும் நாடு இந்தியாதான். இதைத் தொடர்ந்து மே 2012-ல், ஸ்டாண்டர்ட் அண்ட் பூர், இந்தியாவை இன்னும்கூட ஒரு படி கீழே இறக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தது. பல நேரங்களில் இந்த ரேட்டிங் நிறுவனங்களின் பயமுறுத்தல்கள் எல்லாம் பெரும்பாலும் வளரும் நாடுகளைக் குறிவைத்து மட்டுமே வருகின்றன என்றாலும், இந்தியாவின் உலகளாவிய மரியாதை இதனால் கீழே இறங்கியது என்னமோ உண்மைதான்.

இந்தியாவின் பிரச்னைக்குக் காரணமே ஐரோப்பிய யூனியனில் இப்போது நடைபெறும் பிரச்னைதான் என்று சுருக்குவது ஆபத்தானது. கிரேக்க நாடு திவால் ஆகும் நிலைக்கு வந்து தள்ளாடுகிறது என்பதால்தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சடார் என இறங்கியுள்ளது என்று சொல்வது அபத்தம். கிரேக்கத்தின் பிரச்னை என்பது கிட்டத்திட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவருவது. கிரேக்கம்தான் பிரச்னை என்றால், ரூபாயின் மதிப்பு சென்ற ஆண்டே 55 ரூபாயைத் தொட்டிருக்கவேண்டும்.

மார்கன் ஸ்டான்லியின் ருச்சிர் ஷர்மாவின் பார்வை வேறாக இருக்கிறது. 2003-ல் உலக அளவில் எல்லா வளரும் நாடுகளிலும் ஒரு பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் பணத்தை வாரி இறைத்தார்கள். 2003-2008 ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 8% இருந்தது. தாராளமயமாக்கல் ஆரம்பித்த 1991-லிருந்து 2003 வரை இந்தியாவின் ஆண்டு சராசரிவளர்ச்சி விகிதம் 5- 5.5% மட்டுமே. ஆக, இந்தியாவின் 8% வளர்ச்சி விகிதம் என்பது இந்தியாவுக்கோ, இந்திய அரசுக்கோ சொந்தமானதல்ல.

உலகளாவிய எழுச்சி/வீழ்ச்சி தருணங்களிலெல்லாம் நாமும் எழுந்து, விழுந்திருக்கிறோம். இந்திய அரசு 2003-க்குப்பின் செய்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மிகவும் குறைவு. முதலீட்டாளர்கள் பார்வையில், 8% வளரும் ஒரு பொருளாதாரத்துக்கும், வெறுமனே 5-6% வளரும் பொருளாதாரத்துக்குமான வித்தியாசம் மிக அதிகம். அதனால் இந்தியாவின்மீதான பார்வை மாறும் வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார் இவர்.
எது எப்படியிருந்தாலும், நாம் இப்போதைக்கு உலக அளவில் ‘மதிக்கப்படவில்லை’ என்பதுதான் கசப்பான யதார்த்தம். இதை எப்படி மாற்றுவது?

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆகி, திரிணாமூல் காங்கிரஸ் ஐ.மு.கூவிலிருந்து வெளியேறி, தொடர்ந்து புதிதாக உள்ளே வரும் நிதியமைச்சர் சில மாற்றங்களை நிகழ்த்தலாம். இதுநாள்வரை கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களான, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, விமான நிறுவனங்களில் அன்னிய முதலீடு, பென்ஷன் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தல், அன்னிய முதலீட்டின்மீதான கண்காணிப்பு, காப்பீடு நிறுவனங்களைத் தாராளமயமாக்கல் போன்றவை நிறைவேறச் சாத்தியங்கள் இருக்கின்றன.

அடிப்படைக் கட்டமைப்பை விரிவாக்குதல், நிர்வாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துதல், பொதுவான பொருள்கள் மற்றும் சேவை வரியைக் கொண்டுவருதல் போன்ற முடிவுகளையும் அரசு வேகமாக எடுக்கவேண்டும். குடியிருப்பு வாடகை அதிகமாகிவிட்ட நகரங்களில் வருமான வரிவிலக்கை வெறும் இரண்டு லட்ச ரூபாய் என்பதிலிருந்து அதிகப்படுத்தவேண்டும். தொழில்முனைவோர்களையும் முதலீட்டார்களையும் ஊக்குவிக்கவேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வட்டி விகிதத்தையும் குறைக்கவேண்டும்.
உலகளாவிய பெரு முதலீட்டாளர்கள் இந்தியாவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை. ‘நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. எங்களுடைய இந்தியாவிற்கான முதலீடுகளும் முதலீடு செய்வதற்கான காரணங்களும் அப்படியே மாறாமல் இருக்கின்றன. ஆனால், உங்களுடைய அரசும் அரசியல்வாதிகளும் எல்லா விஷயங்களிலும் முதலில் தெளிவையும், தொலைநோக்குப் பார்வையையும், பாரபட்சம் அற்ற விதிகளையும் கொண்டுவரவேண்டும். பிறகு நாங்கள் இந்தியாவுக்கு வருகிறோம்’ என்கிறார் ஒரு பெரு முதலீட்டாளர்.
உலகுக்கு இன்னமும் இந்தியாமீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அரசின் நடவடிக்கையில் மாற்றம் வந்தால் மட்டுமே நாம் இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு மேலெழ முடியும்.
பெட்டி
கொள்கைத் தொடர்ச்சி என்பது கேலிக்கூத்து ஆகிவிட்டது. ஒரு கொள்கை முடிவை எடுக்கிறார்கள். பின், பின்வாங்குகிறார்கள். மற்றொன்றை ஆரம்பிக்கிறார்கள். பிறகு மற்றொன்று.
- பிமல் ஜலான்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்.
வேலைக்குச் செல்ல தகுதியானவர்களின் (18-35 வயது) எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். ஆனால், இதற்கு பெருமைப்பட முடியாது. நம் மக்கள் தொகையில் சரிபாதி 25 வயதுக்கும் குறைவானவர்கள். அறுபது சதவிகிதத்தினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். நம் தொழிற்சாலை-களையும் தொழில் உற்பத்தியையும் அதிகரிக்காவிட்டால் இவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? படித்த, ஆனால் வேலையில்லாத இளைஞர்கள் இருப்பது எந்த நாட்டுக்குமே மிக ஆபத்தானது.
- தீபக் பாரேக்   
எச்.டி.எஃப்.சி சேர்மன்

நன்றி : ஆழம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்