சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS (டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும்.
சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் மீதான இது போன்ற பொய்யான நடவடிக்கைகள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; தவறான அடிப்படையில் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! என்ற தலைப்பில் வரக்கூடிய 2012 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தின் துவக்க நிகழ்ச்சியாக கோவையில் நேற்று மாலை 5:30 மணியளவில் என்.எச்.மஹால் திருமண மண்டபத்தில் சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கே.ராஜா ஹுசைன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் இப்பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.எம்.இப்ராஹிம் பாதுஷா அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.ஐ.அப்துல் ஹக்கீம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக