வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்காகவே ஜப்பானுடன் இணைந்து
ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை விரிவாக்கம் செய்வதாக அமெரிக்கா
தெரிவித்துள்ளது.
ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அமெரிக்காவுடன் ஜப்பான் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறது.
ஜப்பானிடம் நிலம் மற்றும் கடலில் இருந்து ஏவுகணைகளைச் செலுத்தக்கூடிய
கட்டமைப்பு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் எதிரி
நாட்டு ஏவுகணைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிந்து எச்சரிக்கை
செய்யும் ரேடார் கருவியை அமைக்க அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாக வால்
ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.
ஜப்பானின் வடக்கில் ஏற்கெனவே இது போன்ற ரேடார் கருவி
அமைக்கப்பட்டுள்ளது. வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைச்
சமாளிப்பதற்கும், சீன இராணுவத்தைச் சமாளிக்கவும் புதிய ரேடாரை அமைக்க
அமெரிக்கா முயற்சிப்பதாக அப்பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க இராணுவத் தளபதி மார்ட்டின் டெம்ப்சேவிடம்
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆசியாவில்
ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை விரிவாக்கம் செய்வது குறித்து ஜப்பானுடன்
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
ரேடார் கருவிகளை விரிவாக்கம் செய்யும் விஷயத்தில் எந்த முடிவும்
எடுக்கப்படவில்லை. எனினும், பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இது
விளங்குகிறது. ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு என்பது இரு நாடுகளுக்கும்
முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.
இந்த ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு சீனாவுக்கு எதிரானது அல்ல என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட கொரியா தயாரித்துள்ள கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகள்
ஆசிய- பசிஃபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக்
கருதப்படுகின்றன.
வட கொரியா இரகசியமாக அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதும்,
தென்கொரியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருவதுமே
இதற்குக் காரணம்.
வட கொரியா உருவாக்கி வரும் நீண்டதூரம் செல்லக்கூடிய ராக்கெட்களால் அமெரிக்கா வரை சென்று தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக