வாஷிங்டன்: ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், ஐ.நா.,
பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்பதை, அமெரிக்கா எதிர்த்துள்ளது. ஈரான்
நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள்
குறைகூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்
வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட
நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரான்
தலைநகர் டெக்ரானில், வரும், 30 மற்றும் 31ம் தேதிகளில், அணி சேரா
நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன்,
பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில்
பங்கேற்க உள்ளனர். 21 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இதில் பங்கேற்க
உள்ளதாக, ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி விக்டோரியா நூலண்ட்
கூறியதாவது: ஈரான் தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை திசை திருப்ப,
இதுபோன்ற தந்திரத்தை கையாளுகிறது. இந்த மாநாட்டில், ஐ.நா., பொதுச் செயலர்
பான் கி மூன், எகிப்து அதிபர் முர்சி உள்ளிட்டோர் கலந்து கொள்ளக் கூடாது.
இந்த மாநாட்டில் அவர்கள் பங்கேற்பது நல்லதல்ல. மற்ற நாடுகளின் தலைவர்கள்
இந்த மாநாட்டில் பங்கேற்பது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனினும்,
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள், அணு ஆயுதங்களை தயாரிக்கும்
நடவடிக்கையை கைவிடும்படி, ஈரானுக்கு அறிவுறுத்த வேண்டும், இவ்வாறு
விக்டோரியா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக