அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும்
இன அழித்தொழிப்பு ஆகியவற்றை கண்டித்து ராஸா அகாடமி சார்பாக மும்பை ஆஸாத்
மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 2
பேர் பலியானார்கள். 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய
தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் ராகேன் மாநிலத்தில் ரோஹிங்கியா
முஸ்லிம்கள் மீது அரசு உதவியுடன் புத்தர்கள் நடத்தி வரும் இன
அழித்தொழிப்பைக் கண்டித்து மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் ராஸா அகாடமி
என்ற அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்
கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராதவிதமாக கல்வீச்சு மற்றும் தீ வைப்பு
சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து நடந்த வன்முறையில் இருவர் பலியாகி
உள்ளனர்.
முதல் கட்ட தகவலின் படி முஹம்மது உமர் (17), அல்தாப் ஷேக் ஆகியோர்
பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின்
உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு
முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர். இதற்குப் பின்னால் சமூக விரோத சக்திகளின்
கைகள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே பொதுமக்கள், முஸ்லிம்கள் வதந்திகள் மற்றும் கட்டுக்கதைகளை
நம்பாமல் அமைதிகாத்து சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க
வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக