அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

சாதியத்தையும் மதத்தையும் அரசியலுக்குள் கொண்டுவந்தவர் காந்தி: அருந்ததிராய்

ருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன்.  

 ''இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?''
''நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று  சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.''

''உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...''
''அப்பா ஒரு குடிநோயாளி. என்னுடைய 20 வயதில்தான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. ஆனால், நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. அப்பாவைவிட்டுப் பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் ஒரு சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், 'உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.''

''இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?''
''ஆமாம். நான் செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது திருமண வாழ்க்கையில் கிடைக்காது என்பதை என்னுடைய மண வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன். எனக்குக் குழந்தைகள் கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை. என் முதல் கணவருக்கு இரு குழந்தைகள் உண்டு. அவரைவிடவும் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். நான் நேசித்தவர்களை இன்னமும் நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர் விதிமுறைக்குக் கீழ் வாழ முடியாது. சமயத்தில் 10 நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம் சரிப்படாது!''

''இந்த மாதிரி சூழலில், இந்திய ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''இந்திய ஆண், இந்தியப் பெண் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற ஆண்கள் நிறையப் பேர் அழகானவர்கள்... அற்புதமானவர்கள். ஆனால், சமூகத்தில் அடக்குமுறை இருப்பது தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை நான் அடக்குமுறைக்கு உட்படக்கூடிய ஆள் இல்லை. 18 வயதில் நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது அதை அனுமதித்த, 'நீ திருமணம் செய்துகொள்ளாதே’ என்று அறிவுரை சொன்ன ஓர் அசாதாரணமான தாய் எனக்கு இருந்தார். பலருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடையாது. கணவனே கதி என்றுதான் வாழச் சொல்கிறார்கள். பெண்களுக்குப் பெற்றோர் துணையாக இருக்க வேண்டும்.''

''இந்தியாவில் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் நிம்மதியற்ற சூழலிலேயே இருக்கிறதே... காரணம் என்ன?''
''இந்தப் பார்வையையே நான் மறுக்கிறேன். இங்கே ஒரு பெண்ணுக்கு நிம்மதியான வாழ்க்கை என்று எது சொல்லப்படு கிறது? கணவன், அவனுக்கு அடங்கிய ஒரு வாழ்க்கை, குழந்தைகள்தானே..? என் வாழ்க்கையில் திருமணமாகி நிம்மதியாக இருக்கும் ஒரு பெண்ணைக்கூட நான் சந்தித்தது இல்லை. அதனால்தான் சிக்கிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வரும்போது எல்லாம் எதிர்த் திசையில் ஓடிவிடுகிறேன்.''

''படித்தது கட்டடக் கலை... அப்புறம் சினிமா... இப்போது எழுத்து, களப் போராட்டம்...''
''என்னுடைய இயல்பே மாறிக்கொண்டே இருப்பதுதான்.''

'' 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 2007-ல் இரண்டாவது நாவலை எழுதப்போவதாக அறிவித்தீர்கள். ஆனால், இன்னமும் எழுதவில்லை?''
''எங்கே நம் அரசியல்வாதிகள் அதற்கு இடம் கொடுக்கிறார்கள்!'' (சிரிக்கிறார்)

''உங்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிதான் உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியைச் செயல்படாமல் முடக்கிவைத்து இருக்கிறாரா?''
''எனக்குள் இருப்பது அரசியல்தான். அரசியல்வாதி அல்ல.''

''இந்தியாவின் இன்றைய பிரச்னைகளுக்கு மக்களிடம் உள்ள சுயநலமும் சொரணையற்றதனமும் தான் காரணமா?''
''அடிப்படையில் இங்கு பிரச்னைக்குக் காரணம் என்னவென்றால், சாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே சாதியில் சிக்குண்டுகிடக்கிறது. அந்தச் சாதி தான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சாதிய அமைப்பு, நிலப்பிரபுத்துவ முறையில் இருந்து கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது.''

''இன்னமும் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறீர் களா?''
''நான் மாவோயிஸ்ட் கிடையாது. ஆனால், காடுகளில் கனிம வளங்களைக் கொள்ளைஅடிப்பதற்காக அங்குள்ள பூர்வகுடிகளின் நிலங்களைப் பறிப்பது, அடக்குமுறையால் அவர்களை ஒடுக்குவது போன்ற பிரச்னைகளில் மாவோயிஸ்ட்டுகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.''
 
''மாவோயிஸ்ட்டுகளின் வழி சரியா?''
''நான் அப்படிச் சொல்லவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் போராட்ட அணுகுமுறை காட்டுக்கு வெளியே எடுபடாது. ஆனால், இப்போது உள்ள சூழலில் வேறு எந்த ஒரு தீர்வும் தென்படவில்லை. காட்டுக் குள் துணை ராணுவப் படைகள் புகுந்த பின்னர், அங்குள்ள மக்கள் தனித் தீவாக மாற்றப்பட்டுள்ளனர். வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே அவர்கள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா இப்போது அதைத்தான் விரும் புகிறது. குறிப்பாக, பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு. இங்குள்ள கனிமங்களை அப்படியே அள்ளிச் செல்ல ஏதுவாக வனங்களில் நம் ராணுவம் புகுந்து சூறையாட வேண்டும் என்று விரும்புகிறது. மன் மோகன் சிங்கால் அதை முழு வேகத்தில் செய்ய முடியாததால்தான் 'செயல்பாடற்றவர்’ என்று அவர்களுடைய ஊடகங்கள் எழுதுகின்றன.''

''இந்தியாவில் ஊழலை ஒழிக்க என்ன வழி?''
''இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எதுஎன்றால், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்குப் பணமோ, அதிகாரமோ இல்லாத சாமானியன் நீதியைக் கோரி ஒரு துறையைக்கூட அணுக முடியாது. இந்த மாதிரி ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டு, எவ்வளவு சட்டங்கள், எத்தனை போலீஸாரைக் கொண்டுவந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கோஷம் போடுகிறது.''

''காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா... காஷ்மீர் தனி நாடாவது ராஜதந்திரரீதியாகச் சரிதானா?''
''உங்கள் தலைக்கு மேல் ஏழு லட்சம் ராணுவ வீரர்கள் நின்றுகொண்டு இருக்கும்போது, நீங்கள் எப்படிச் சிந்திக்க முடியும்? யோசித்துப் பாருங்கள்... காஷ்மீரிகளின் பிரதிநிதியாக நான் பேசவில்லை. சுதந்திரம் என்ற அவர்களுடைய முழக்கத்துக்குப் பின் பல அர்த்தங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவர்களுடைய வாழ்க்கை, அதைத் தீர்மானிக்கும் அவர்களுடைய உரிமை. அந்த உரிமையைத்தான் நான் ஆதரிக்கிறேன்.''

''சரி, உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?''
''ஒரு திருவிழாவுக்காகக் கூடும் ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.''

''அரச பயங்கரவாதம், சுதந்திரம்குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால், இலங்கையின் பின்னின்று ஒரு போரை இந்திய அரசு நடத்தியபோது நீங்கள் என்ன செய்தீர் கள்?''
''இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்!
இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.''

''இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?''
''இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது. மக்கள் போராட்டத்தை அடக்க ராணுவத்தை அனுப்புவது ஆகட்டும்; மற்ற நாடுகளிலும் பிரிவினையை உருவாக்குவது ஆகட்டும். தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் நியாயம் இருக்க வேண்டும். வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.''

''இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?''
''ப்ச்... ம்ஹூம்... அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.''

''மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?''
''எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்). இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்.''

''உங்கள் பார்வையில் இந்தியாவில் இன்றைக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய அரசியல் தலைவர் அல்லது இயக்கம் எது?''
''இந்த மாதிரி அரசியல் சூழலில் இப்படி ஒரு கேள்விக்கு அர்த்தமே இல்லை.''

''இந்தியாவை எப்படித்தான் சீரமைப்பது?''
''அப்படியான திட்டங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை!''

''உங்களுக்கு காந்தியத்தின் மீது நம்பிக்கை உண்டா?''
''இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலியலாளர் என்பதைத் தாண்டி, காந்தி மீது எனக்கு எந்த ஈர்ப்பும் கிடையாது. ஸ்திரத்தன்மை அற்ற ஓர் அரசியல் அவருடையது. இந்தியாவின் முதல் என்.ஜி.ஓ. அவர். சாதியத்தையும் மதத்தையும் அவர் அரசியலுக்குள் கொண்டுவந்தது கொஞ்சமும் எனக்குப் பிடிக்காதது.''

''எல்லோரையுமே நிராகரிக்கிறீர்கள்... நீங்கள் அவநம்பிக்கையைத்தான் விதைக்கிறீர்கள். நீங்கள் அவநம்பிக்கைவாதியா?''
''மக்களுக்காகப் பேசும் நான் எப்படி அவர்களிடம் அவநம்பிக்கையை விதைப்பேன்? எதிர்ப்பைக் காட்டுவதில் மற்ற மக்களிடம் இருந்து மிக வேறுபட்ட, தீவிரமான அணுகுமுறையை இந்திய மக்கள் கையாள்கிறார்கள். இன்றைக்கு ஜார்கண்டிலும் சட்டீஸ்கரிலும் அரசை எதிர்த்து நிற்கும் மக்களின் போராட்டம் அசாதாரணமானது. நான் அவர்களுக்காகப் பேசுகிறேன். அவர்கள் இடத்தில் இருந்து இந்த நாட்டைப் பார்க்கிறேன். அது உங்களுக்கு அவநம்பிக்கையாகத் தெரிந்தால், இந்த நாடு அவர்களிடத்தில் அவநம்பிக்கையை விதைத்து இருக்கிறது என்றே அர்த்தம்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்